e-mozi

பாகம் 2: 004 இந்தியப் பரிணாம நோக்கு

அறிவியலை விஞ்ஞானிகளிடம் விட்டு, ஆன்மீகத்தை ஆச்சார்யர்களிடம் விட்டு, விட்டு நம்ம வேலையை பார்த்துக்கொண்டிராமல் ஈதென்ன விசாரம் என்று வினவலாம்.

காரணமிருக்கிறது.

விஞ்ஞானி என்பவன் எங்கோ தேவலோகத்திலிருந்து பிறந்தவன் அல்ல. அவனும் இச்சமூகம் உருவாக்கிய ஒரு பிரஜைதான். இச்சமூகத்தின் சிந்தனைக் குழம்பில் ஊறிய ஒரு துளிதான். அவனை மற்றோரிடமிருந்து பிரிப்பது, அவன், அறிவு, அவன் நெறியான செயல்பாடு, திறந்த போக்கு போன்றவை. அறிவியல் என்பதும் இச்சமூகத்தின் ஒரு நிருவனம்தான். அதன் சிறப்பு அதன் அணுகுமுறைதான். அதாவது research methodology.

விஞ்ஞானிக்கும், மெய்ஞானிக்கும் பொதுவாய் இருப்பது அறிவு (ஞானம்). அங்கிருந்துதான் இருவருக்குமே inspiration என்பது வருகிறது. மேலும், அறிவியல், தத்துவத்தின் கட்டுமானத்திலேயே தன் செயல்பாட்டை அமைத்துக்கொள்கிறது. நல்ல அறிவியல் வர நல்ல தத்துவக் கோட்பாடுகள் அவசியம். இந்த இடத்தில் தத்துவ ஞானி உயர் இடத்தில் உள்ளான். முனைவர் என்பதை ஆங்கிலத்தில் doctor of philosophy என்கிறோம். Doctor of Biochemistry என்றோ doctor of Cosmology என்றோ சொல்வதில்லை. எனவே தத்துவமே அறிவின் உயர்பீடம்.

மெய்ஞானவியலை தத்துவங்கள் என்றுதான் சொல்கிறோம். நாம் உருவகப்படுத்திப்பார்க்கும் அனைத்துக் கடவுளரும் அடிப்படையில் தத்துவங்களே. மும்மூர்த்திகள் பிரபஞ்சத்தின் மூன்று குணங்களைச் சொல்ல வந்தது. சாத்வீகம் - விஷ்ணு, தமஸ் - சிவன், ரஜோ - பிரம்மா. மேலும் இப்படி விளக்குவார்கள். எனவே அறிவியலில் research methodology இருப்பது போல் மெய்யியலில் வேதாந்தம், சித்தாந்தம் என்ற research methodology உண்டு. அங்கும் எதையும் தீர விசாரிக்காமல் ஏற்றுக்கொள்வதில்லை. அசட்டுத்தனமான தி.க பிரச்சாரங்கள் சமூகத்திலுள்ள மூடநம்பிக்கைகளைக் கேலி செய்ய வந்தன. அதன் பின்னுள்ள தத்துவங்கள் விளக்கப்படும் போது அவை கேலிக்குரியவை அல்ல என்பது புரியும்.

விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் வாழ்வும், இயற்கையுமே பரிசோதனைக் கூடமாக, ஆய்வு பொருளாக, கற்பக தருவாக அமைகின்றன. டார்வின் H.M.S Beagle எனும் கப்பலில் பயணப்பட்ட போது கலப்பகஸ் தீவுக்கூட்டகளில் உயிரியல் பரிமாணத்திற்கான வித்து கிடைத்தது. 20 வருடங்கள் தன் கொள்கையை வெளியிடாமல் ஊறப்போட்டிருந்தார். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று அவர் வாழ்ந்த எலிசபெத் அரசாட்சி காலத்தில் சொல்லமுடியவில்லை. ஆயினும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எப்போது ஏற்பட்டது எனில் Alfred Russel Wallace எனும் இன்னொரு ஆங்கிலேயர் (ஆஸ்திரேலியர்) மலேரியக் காய்ச்சலில் நோவுற்ற போது கனவுபோல் பரிணாமக் கோட்பாடு அவருக்குத்தோன்ற அவர் இது குறித்து முதல் கட்டுரை வடித்துவிட்டார். ஆக, பரிணாமவியலும் ஒருவகையில் அருளிச்செயலே!

ஆழ்வார்களுக்கு பூரண அருளால் இது போன்ற பல்வேறு கோட்பாடுகள் தோன்ற அவைகளை பாசுரங்களாக வடித்து வைத்தனர்.

இரண்டு முறையிலும், அடிப்படையாக இயற்கையே ஆசானாக உள்ளது. உதாரணமாக வேதாந்த முறையில் ஈஸ்வரனைப் பற்றி விளக்க வரும் போது ஆதிசங்கர பகவத் பாதாள், நம்மை வைத்தே (அதாவது ஜீவனை வைத்தே) விளங்கச் சொல்வார். இப்படி, கண்களுக்குப் புலனாகும் பரு உலகையும்,உயிர்களையும் முதலில்சுட்டிக்காட்டி, அதற்கு ஆதாரம் எது என்பதை உணர்த்துவது உபநிஷத்தின் வழி (நன்றி தேவ்). இதைச் “சாகா சந்த்ர ந்யாயம்” என்பர்.

இதை எளிதாக விளக்கும் பாடல்:

தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல்
ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார்போல்
தூலத்தை முன்புகாட்டிச் சூக்கும சொரூபமான
மூலத்தைப் பின்புகாட்ட முனிவரர் தொடங்கினாரே.


(கைவல்ய நவநீதம்) (நன்றி. மின்தமிழ்)

எனவே ஸ்தூல உடம்பைக்காட்டி, அதன் சூட்சுமங்களை விளங்கச் செய்து சூக்கும சொரூபமான மூலத்தைக்காட்டுவது நமது சம்பிரதாயம். எனவே மெய்ஞானிகளுக்கும் முறையான methodology உண்டு. இந்த முறையை hermeneutic science என்பர்.

திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே


உதாரணமாக உடலில் உயிர் எங்குள்ளது? என்று கேட்டால் எதைக் காட்டுவது? கையில் உள்ளதா? மூக்கில் உள்ளதா? இல்லை மூளையில் மட்டும் உள்ளதா? எங்குள்ளது. அது உடல்மிசை கரந்தெங்கும் பரவி இருக்கிறது. அது போல், விசும்பு, வெளி, நீர், நிலம், எரி எனும் ஐம்பூதங்களில் படர் பொருளாக உள்ளான் இறைவன்.

இதை எந்த methodology கொண்டு அறிவது? என்று கேட்போருக்கும் நம்மாழ்வார் பதில் சொல்கிறார், உளன்! யார் உளன்? உடம்பில் உயிர் எப்படிக் கரந்து பரவியுள்ளதோ, அது போல் இறைவன் பிரபஞ்சத்தில் உளன்! இதை, எதைக்கொண்டு அறிவது?

உளன்! சுடர்மிகு சுருதியுள்!!

அவன் சுருதி எனப்படும் வேதத்தின் உள்ளே methodologyயாக உள்ளான். வேதம் நன்கு கற்கும் போது அவன் இருப்பு வெளிப்படும். சரி, வேதமறியாத நம் போன்றோருக்கு கதி? சுவாமி வேதாந்த தேசிகர் சுட்டியது போல், திருவாய்மொழியே நமக்கு வேதம். இதில் இல்லாத கருத்து இல்லை. இதில் புரியாத விளக்கமில்லை! எனவே, சுடர்மிகு சுருதியான திருவாய்மொழியில் “அவன் உளன்”.

ஆகா! அதனால்தான், திருவாய்மொழி கொண்டு உலகைக்காண முயல்கிறோம். இறைவனை வேறு எங்கும் தேடவேண்டாம், “உளன்! சுடர்மிகு சுருதியுள்”. அவன் எழுத்தாகவே உள்ளான். அவன் பிரதியாகவே (text) உள்ளான். அவன் அணுகுமுறையாகவே உள்ளான்.

இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும்? மெய்ஞான வழியில் விஞ்ஞான உண்மைகளுக்கு பின்புலம் காட்ட? (தொடர்வோம்)

4 பின்னூட்டங்கள்:

  R.DEVARAJAN

Sunday, May 17, 2009

அருமையான அவதாரிகை !
அறிவியலும் ஆன்மிகமும் ஆரம்பிப்பது ஒரே புள்ளியிலிருந்துதான் என்பதை
அழகாக விளக்கி விட்டீர்கள்.

ஆன்மிகப் பரிணாமத்தின் உச்சத்தில்
ஆண்டவனின் அருளை எதிர் நோக்கியவனாக இருக்கும் ஜீவனின்
நிலையையும் அறிவியலின் பின்னணியில் மேலும் தெளிவாக விளக்குவதே உங்கள்
நோக்கமாக இருக்க வேண்டும் என்று
ஊகிக்கிறேன்.

தேவ்

  நா.கண்ணன்

Sunday, May 17, 2009

நன்றி தேவ். மின்தமிழில் வேங்கடேஷுக்கு எழுதிய பதிலை கொஞ்சம் விரிவு படுத்தி `பரிணாமம்` என்பது உடல் சார்ந்ததா? உயிர் சார்ந்ததா? என்று விளக்களாமென நினைக்கிறேன். `அவனிட்ட வழக்காய்` இருக்கமுடியாத அவஸ்தை பற்றிப்பேசி, முயலுதல் சிறப்பு என்று சொல்லலாம்!

  R.DEVARAJAN

Sunday, May 17, 2009

*ஸ்மிருதி*

வேதம் - சுருதி;தனி நபர்களால் எழுதப்படாதது, அபௌருஷேயம்

ஸ்ம்ருதி - அதை ஒட்டி வாழ்க்கை நடைமுறைகளை அமைத்துக் கொள்ள
முனிவர்களால் எழுதப்பட்டவை,
பௌருஷேயம்.

தேவ்

  நா.கண்ணன்

Sunday, May 17, 2009

தேவ்: பிழை திருத்தியமைக்கு நன்றி. மாற்றிவிட்டேன். அடுத்த மடல் வந்துவிட்டது. வாசித்து கருத்து சொல்லவும்!