e-mozi

பாகம் 2: 005 கற்கும் கல்வி செய்வேனும் யானே!

அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் மேலைக் கலாச்சாரத்தில் மிகப்பெரிய பிளவு இருக்கிறது. அது கீழைக்கலாச்சாரத்தில் இல்லை. ஏனெனில் இந்திய மரபில் இறைவனை உணர்தல் என்பது அறிவின் பாற்பட்டே உள்ளது. இதை ஞான மார்க்கம் என்பர். அறிவியலில் எத்தகை நுண்ணிய, தீர்க்கமான பார்வைகளுண்டோ, அவையனைத்தும் ஞானமார்க்கத்திலும் உண்டு. எனவே இங்கு அறிவியல், மெய்யியல் என்பது பிரித்துக்காணமுடியாத ஒரு பெரும் பரப்பாய் உள்ளது. இந்த வசதி ஒரு மேலைத்திய விஞ்ஞானிக்கு இல்லை. டார்வின் தன் கோட்பாட்டை முன் வைத்த போது கிறிஸ்தவ தத்துவம் (christian doctrines) அதற்குத்தடையாக இருந்தது. விவிலிய முதல் ஏற்பாட்டின்படி, இறைவன் மனிதனைப்படைத்தது 5000 வருடங்களுக்கு முந்தி என்று இருக்கிறது. எகிப்திய கலாச்சாரம் கோலோட்சிய காலங்கள் அவை! அதே நேரத்தில், இந்தியப்பாரம்பரியத்தில் எழுதப்பட்ட ஒரு நூல் உயிர்கள் தோன்றி நூற்றுத்தொண்ணூத்தாறு கோடியே, எண்பத்தைந்து லட்சத்து, மூவாயிரத்து நூற்று ஒன்பது வருடங்கள் ஆகின்றன என்று சொல்கிறது. அதாவது, ஏறக்குறைய 2 பில்லியன் வருடங்கள் (1,968,503,109). இது நவீன அறிவியல் பார்வையுடன் ஒத்துப்போவதாக உள்ளது. (நூல்: ஸ்ரீமத்விகனஸோத்பத்தி சரித்ரம், தஞ்சை சர்ஸ்வதி மகால் வெளியீடு, 1997. ஆசிரியர் எஸ்.சுதர்சனன்)

ஆச்சர்யம் என்னவெனில் இப்போதுள்ள நவீன வேதிம, இயற்பியல் உபகரணங்கள் இல்லாமல் இவர்களால் எப்படி? இப்படியானதொரு காலக்கணக்கைச் சொல்லமுடிந்தது? அப்படியெனில், பிரபஞ்சத்தில் மறைபொருளாய் இருக்கும் தரவுக்கிடங்கை (database) அணுகும் ஆய்வுமுறை இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அந்தக்கல்வி முறை என்ன? அது இப்போதும் சாத்தியப்படுமா?

இப்படியொரு கேள்வி கேட்டோமெனில் நமது பனுவல்களை கொஞ்சம் வெட்கமின்றி, கூச்சமின்றி அணுகும் வாய்ப்புக்கிடைக்கிறது. நவீன உலகில், விஞ்ஞானி, விஞ்ஞானம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆன்மீகவியலர் ஆன்மீகம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இரண்டிற்குமான ஊடுபாயல் (crosstalk) இருக்கக்கூடாது என்ற எழுதாத சட்டமொன்றுள்ளது. அதனால் பலருக்கு இம்மாதிரி விஷயங்களைப் பேசுவதில் கூச்சம்.

விஞ்ஞானிகளிடமே கூட இது பற்றியெல்லாம் பேசுவது கூச்சமளிக்கும் செயலே. உதாரணமாக, Till Kekule என்பவர் பென்ஜீன் மூலக்கூறு கண்டு சொன்ன வரலாறு, இன்றும் அறிவியல் உலகில் விவாததிற்கு உள்ளாகும் பொருள்:

"...I turned my chair toward the fire place and sank into a doze. Again the atoms were flitting before my eyes. Smaller groups now kept modestly in the background. My mind's eye sharpened by repeated visions of a similar sort, now distinguished larger structures of varying forms. Long rows frequently rose together, all in movement, winding and turning like serpents; and see! what was that? One of the serpents seized its own tail and the form whirled mockingly before my eyes. I came awake like a flash of lightning. This time also I spent the remainder of the night working out the consequences of the hypothesis."

ஆக, இதை நம்மொழியில் சொல்வதானால் `அருளிச்செயல்`. அதாவது, பிரபஞ்ச ஆக்கம், நிர்மாணித்தல், காத்தல், அழித்தல் சம்மந்தமான எல்லா சேதிகளும் எங்கோ ஒரு மாகணினியில் (super computer), ஒரு சேவியில் (Server) உள்ளது. அதை அணுகுவதற்கான access code சிலருக்குத் தெரிகிறது. பலருக்குத்தெரிவதில்லை.

ஏனிப்படி சொல்ல வேண்டியுள்ளது எனில், ஒரு உயிர் உருவாகும் போது, ஆண் அணுவும், பெண் அணுவும் சேர்ந்தவுடன், ஒரு மாபெரும் transcription of code நடக்கிறது! அதாவது, உலகில் காணும் எல்லா உயிரினங்களின் வாழ்வியல் சேதி DNA, RNA எனும் மூலக்குறில் குறிமவடிவில் (encoded, enscription) உள்ளது. இருபால் உயிரினங்களின் தோற்றம் இம்மூலக்கூறு சேர்க்கையிலும், இக்குறிம மொழிபெயர்பிலும் அமைந்துள்ளது. இது அனைத்திற்கும் பொது. ஆயினும், ஒரு யானை யானையாகவும், ஒரு மனிதன் மனிதனாகவும் மாறுவது விந்தை. அது மட்டுமல்ல, முதல் சேர்க்கையில் முட்டையும், விந்துவும்தான் சேர்கின்றன. அந்நிலையில் ஒரு மாறுபடாத (undifferentiated) கரு, மெல்ல, மெல்ல ஒவ்வொரு உறுப்பாக மாறுபடுவதும் விந்தையே! அறிவியல் இது, இது, இன்னின்ன முறையில் மாறுபடுகிறது என்றளவில் சொல்லி நிறுத்திக்கொள்கிறது. ஏன்? எப்படி எனும் கேள்விகளுக்கு விடையில்லை. ஏன் ஒரு செல் பல்வேறாக பெருகுகிறது? எப்படி ஒன்றே பல்வேறு வடிவங்களை ஏற்றுக் கொள்கிறது? பல்வேறு வடிவங்கள் ஏற்றுக்கொண்டபின் இதயம், இதயமாகவும், கல்லீரல், கல்லீரலாகவும் தொடந்து செயல்பட ஆணையிடுவது யார்? எதன் கட்டளையில், இவை கட்டுப்பட்டு செயல்படுகின்றன? மேல் தோல் கிழிந்தால் ஒட்டிக்கொள்கிறது, சில நேரம் முறிந்த எலும்பு கூட ஒட்டிக்கொள்கிறது. ஆனால் நரம்பு முறிந்தால் மீண்டும் வளருவதில்லை (regeneration). ஏன்? மூளையில் கூட, பாதிக்கப்பட்ட பகுதிகளின் செயல்களை பிற பாகங்கள் ஏற்று நடத்துகின்றன!மூளை இயங்கும் விதமே இவ்வித ஆச்சர்யத்திற்குரியதுதான். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பற்றிய ஒரு வீடியோயை என் கவனத்திற்கு ஒரு அன்பர் கொண்டுவந்தார். இதில் ரெக்ஸ் எனும் சிறுவன் மூளை குன்றிய நிலையில் இசையின் நுணுக்களை மிக எளிதாக அறிந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இந்த வீடியோவில் மூன்று சிறுவர்/சிறுமிகளின் வாழ்வு காட்டப்படுகிறது. தமிழகத்தில் இதை musical prodigy என்பார்கள். பாலமுரளி கிருஷ்ணா இம்மாதிரி வரம் பெற்றவர். ஆனாலும், இவர்கள் போல் அல்லாமல் உடல் ஊனமுற்ற நிலையிலும் இப்படி வரம் பெற்று வாழ்வது சிறப்பு இல்லையா?


Watch CBS Videos Online

இக்குழந்தைகளுக்கு இந்த வரம் எப்படி அமையப்பெறுகிறது? மூளை என்பதுதான் என்ன? அது சேதிகளை எப்படி சேகரிக்கிறது? எங்கு, எப்படி சேர்த்து வைக்கிறது? எப்படிப் புரிந்து கொள்கிறது? புரிந்துகொள்வது யார்? மூளை மட்டும்தானா? இசை கேட்கும் போது உடலில் புல்லரிப்பு ஏன் வருவானேன்? மூளை மட்டும் அனுபவிப்பதாகத் தெரியவில்லையே! நம்மாழ்வார் சொல்வது போல் உடலெங்கும் கரந்து பரவியிருக்கும் உயிர் அல்லவோ இசையை அனுபவிக்கிறது? இந்த இசை அனுபவம், ஒருவருக்கு மட்டும் சொந்தமா? இல்லையே! எல்லோரும் அனுபவிக்கிறோமே! மனிதர்கள் மட்டுமா? பல்வேறு விலங்குகளும், ஏன் தாவரங்கள் கூட அனுபவிக்கின்றனவே! தாவரங்களுக்கு மூளையுண்டா? கேள்விகள்தான் நிற்கின்றன. பெரிய விஞ்ஞானி Stephen Hawking. ஐன்ஸ்டைனுக்கு அடுத்து என்கிறார்கள். அவரால் பேசக்கூட முடியவில்லை. அவர் மிகவும் ஆச்சர்யமான வகையில் பிரபஞ்ச உண்மைகள் பற்றிச் சொல்கிறார் (கணினியின் உதவியுடன்). இதைப்பற்றி கொஞ்சம் யோசிக்கும் போது மூளைதான் எல்லாம் என்று எப்படிச் சொல்ல முடியும்? மூளைச்சாவு (brain death) என்பதையே உயிரின் கடைசி நிலை என்று இப்போது கணக்கிடுகிறோம். மூளை ஒரு பொறி போலும். உடற்பொறியின் சாவி அங்குள்ளது போலும். மூளை எனும் சாவி கெட்டுப்போனவுடன் உயிரியக்கம் நின்று விடுகிறது. அதுவரை அதை இயக்கியது யார் எனும் கேள்வியுடன்!

எதற்குச் சொல்ல வருகிறேன் எனில், ஆன்மீகப்பேச்சில்தான் mysticism இருக்கிறது என்றில்லை. அறிவியலிலும் mysticism உண்டு. நிறைய உதாரணங்கள் தேடி எடுக்க முடியும். நாம் இங்கு அறிவியலை mystify செய்ய வரவில்லை. பிரபஞ்ச அமைப்பே, பெரிய பிரம்மிப்பாய் உள்ளது! அதன் படி நிலைகளை, அது செயல்படும் விதத்தை என்று நாம் அறியப்போகிறோம்? எப்படி அறியப்போகிறோம்?

அறிவியல் ஒருவழி. முன்பு சொன்னது போல், அறிவியல் என்பது வேதாந்த மார்க்கமே. இங்கு எந்த முரணுமில்லை. பேச்சு முறைகள், அணுகுமுறைகள், பரிபாஷைகள் கொஞ்சம் மாறுபடும். ஆனால் பேதமற்ற நெஞ்சுடன் பார்க்கப் பழகினால் நம்மாழ்வாரகட்டும், Stephen Hawking ஆகட்டும், இவர்கள் பேசுவது பொது உண்மை பற்றியே என்பது புலப்படும். அந்த உண்மையைக் கண்டறியும் ஆர்வத்தில், இந்திய அணுகுமுறை என்ன? இதன் நோக்கு என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.

அடிப்படியாக ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும்.

யானேயென்னை அறியகிலாதே,
யானேயென்தனதே யென்றிருந்தேன்,
யானேநீயென் னுடைமையும்நீயே,
வானேயேத்து மெம்வானவரேறே!


நான் யார் என்று இது நாள் வரை அறிந்திலேன். நான் என்பது இந்த உடலும், அதன் இச்சைகளும், அதன் முரண்பாடுகளும் என்றிருந்தேன். ஆனால், ஒரு இனிய பொழுதில் நீ வந்து நான் என்பது நீயே என்று காட்டினாய். நான் உன் உடைமை என்றும் காட்டினாய். இனி, இக்கேள்விக்குள் எப்படிச் செல்வது என்பதையும் நீயே வந்து காட்டியருள வேண்டும்!

9 பின்னூட்டங்கள்:

  Karthigesu

Sunday, May 17, 2009

"Modern geologists and geophysicists consider the age of the Earth to be around 4.54 billion years (4.54 × 109 years ± 1%).[1][2] This age has been determined by radiometric age dating of meteorite material and is consistent with the ages of the oldest-known terrestrial and lunar samples." விக்கிபீடியாவில் பிடித்தேன். ஆகவே 2 பில்லியன் என்பது இதில் பாதிதான் உள்ளது.

"எனவே இங்கு அறிவியல், மெய்யியல் என்பது பிரித்துக்காணமுடியாத ஒரு பெரும் பரப்பாய் உள்ளது."

ஆம். அதற்குக் காரணம் அறிவியல் என்னும் ஒரு துறை இங்கு ஆரம்பமாகாமலே போனது என்றும் கொள்ளலாமோ?

ரெ.கா.

  நா.கண்ணன்

Sunday, May 17, 2009

உண்மை ரெ.கா. பூமி உருவாகி 4~5 பில்லியன் வருடங்களாகின்றன, ஆயின், உயிர்த்தோற்றம் அங்கு எப்போது நிகழ்ந்தது என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. சில கணக்கின் படி அது 2 பில்லியன் வருடங்களுக்குள் இருக்கலாமென்று நம்பப்படுகிறது. அது நம் இந்திய நூல் சொல்லும் கணக்கில் விழுகிறது!

பார்க்க: Origin of Life on Earth: Where and when did life begin? நாம் அறிவியல் என்று சொல்வது பருப்பொருள் உண்மையை (material science). ஆனால் இந்திய மெய்யியல் அறிவியல் என்று சொல்வது பூரண உண்மையை (holistic truth).

  கிருஷ்ணமூர்த்தி

Monday, May 18, 2009

அறிவியலை முறையாக அறியாதவன் என்பதனால், உங்களுடைய பதிவுகளைப் படித்து விட்டு யோசித்துக் கொண்டிருந்தேன்.

//ஒரு விஞ்ஞானப் பார்வையில், உயிர் என்பது உருவானதே ஒரு விபத்து தான், எப்படி, நத்தைச்சிப்பிக்குள், ஏதோ ஒரு தூசு புகுந்துகொள்ள அதைச் சுற்றி அந்த நத்தை உருவாக்குவதே முத்து என்பது போல, இந்த பூமியில், ஏதோ ஒரு விபத்தாக அல்லது திட்டமிடாத, காரணமில்லாத, தற்செயலான ஒன்றாக உருவானதுதான் உயிர். இதைப் படைத்தவன் என்று ஒருவனும் இல்லை, இதற்கு மேல் ஒன்றுமில்லை என்று ஒரு வெற்றிடத்தைமுன்வைக்கிறது.//

http://consenttobenothing.blogspot.com/2009/01/blog-post_20.html

நான்கைந்து மாதங்களுக்கு முன்னால், செயற்கை உயிர் பற்றி இங்கே இணையத்தில் ஒரு தமிழ்ப் பதிவு, அதன் தொடர்ச்சியாக எழுந்த சிந்தனையில் சென்ற ஜனவரியில் எழுதிய ஒரு பதிவு உங்களுடைய தொடர்பதிவுகளுக்கும், பொருத்தமாக இருக்கிறதென்றே நினைக்கிறேன்!

  நா.கண்ணன்

Monday, May 18, 2009

கிருஷ்ணமூர்த்தி: கல்லூரிக் காலங்களிலிருந்து Origin of life என்பது என் இஷ்டப்பாடம். உயிர் எப்படித்தோன்றியிருக்கும் என்பதை அறிவியலால் யூகிக்கமுடிகிறது. சில பரிசோதனைகளில் சில ஆதார மூலக்கூறுகளை உருவாக்கவும் முடிகிறது. பூமிக்கு உயிர் வேறெங்கிருந்தும் வந்திருக்கலாம், சேதனம் என்பது பிரபஞ்சம் முழுவதும் இருக்கலாம் என்றெல்லாம் இப்போது பரவலாகப் பேசப்படுகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்று உருவாகவே முடியாதே! ஒன்றிலிருந்துதானே ஒன்று உருவாக வேண்டும். 'இல்லை' என்ற சொல்லுக்குப் பொருளே இருப்பதிலிருந்து வருவதுதானே!

  கிருஷ்ணமூர்த்தி

Monday, May 18, 2009

வெற்றிடத்தில் இருந்து எதுவும் உருவானதாக நான் சொல்லவில்லை. இங்கே சில அறிவியலாளர்கள் உயிர் என்பதே ஒரு விபத்து, chance என்று சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பதிலாகவே, எனக்கெழுந்த சிந்தனையில் தோன்றியதை சென்ற ஜனவரியில் எழுதியது-அது இப்போது நீங்கள் சொல்ல வரும் விஷயத்திற்குப் பொருந்திப் போகிறது என்பதே, நான் சொல்ல வந்தது.

  நா.கண்ணன்

Monday, May 18, 2009

உங்கள் நோக்கு புரிந்தது. உங்கள் வலைப்பதிவும் கண்டேன். என் பதில் அவர்களுக்குத்தான். உங்களுக்கில்லை ;-) தன் நாபி தொப்புள்குடியைக் காண்பவனுக்குத் தோன்றாதோ ஒரு மூலம் எல்லாவற்றிற்குமுண்டு என்று!!

  Anonymous

Monday, May 18, 2009

http://www.rediff.com/news/
jan/29sagan.htm
You have company. His videos
are on you tube!
In science one verifies!
In religion one realizes!
His novel was made into a
hollywood movie called Contact.
It was an intersting movie.
But doesn't come close
to realized Saints' understanding
of the workings of comos!

  நா.கண்ணன்

Tuesday, May 19, 2009

மிக்க நன்றி. கார்ல் சாகன் எனக்குப் பிடித்த ஆய்வாளர். இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுண்டு. நீங்கள் சுட்டும் நிகழ்ச்சி, தமிழ் மரபு அறக்கட்டளை `நிகழ்கலை` பதிவில் இடம் பெற்றுள்ளது.

Carl Sagan

  www.bogy.in

Wednesday, April 14, 2010

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in