e-mozi

பாகம் 2: 003 பரிணாமம் உண்மையா?

நாத்திகம் எனக்கு இயற்கையாக வந்ததொன்றில்லை. புகுத்தப்பட்ட ஒன்று. முதல் நிலையில் திராவிட கழகம் அப்பழியை ஏற்கிறது. வீட்டைவிட்டு வெளியேறினால் சண்முகப்பட்டர் வீடு. அவர் வீட்டுச் சுவரிலேயே எழுத்திருப்பான், `கடவுளை நம்புகிறவன் முட்டாள்! கடவுள் இல்லவே இல்லை` என்று. பாவம் அவரும் வெள்ளையடிக்க, அடிக்க, இவனும் அழுத்தமாக எழுதிவைப்பான். ஒருநிலையில் `இது கடவுளுக்கே வெளிச்சமென அவரும் விட்டுவிட்டார். பள்ளி செல்லும் இளம் வயதில் இது உறுத்தியது. ஆயினும், தெருவில் உள்ள எல்லோரும், ஏன்? ஊரிலுள்ள எல்லோரும் கோயிலுக்கு வருவதாலும், பள்ளி மாணவர்கள் எல்லோரும் ஏறக்குறைய திருநீறு அணிந்து வருவதாலும், தி.கவின் இக்கூற்று என்னை அதிகம் பாதிக்கவில்லை.

பெரிய மனக்குழப்பம் வந்தது அமெரிக்கன் கல்லூரியில்தான். உயிரியல் எடுத்ததுதான் வம்பு. அமெரிக்கன் கல்லூரி கிறிஸ்தவக்கல்லூரி, கல்லூரிக்குள்ளே தேவாலயமுண்டு. ஆனால், உயிரியல் பேராசிரியர் ஜே.சி.பி.ஆபிரஹாம் மட்டும் நாத்திகராகவே இச்சூழலில் இருந்தார். அவர் உயிரியல் பாடமெடுக்கும் முறை அங்கு பிரசித்தம். அவ்வளவு நல்ல ஆசிரியர், ஆனால் கடவுள் வேண்டாம் என்றிருந்தார். கல்லூரிக்காலங்களில் இயல்பாக இருக்கும் மத, மதப்பு, இளமை, எதிர்க்கும் குணம் எல்லாம் சேர்ந்து அவர் சொல்வதை நம்ப வைத்தது. அதிலும் எனக்கு உயிரியல் பரிணாமம் (evolutionary biology)என்பது இயல்பாகவே பிடித்த பாடம். அதில் விற்பன்னர் ஜே.சி.பிதான்.

அவர் படித்த காலங்களில் பரிணாமவியலார் (evolutionist)என்றாலே கடவுள் வேண்டாம் என்று சொல்லுவோர் என்றிருந்தது. எனவே உயிரியல் விந்தைகள் எல்லாம், இயற்கை தானாக உருவாக்கியதே என்று சொல்லித்தந்தனர். எவ்வளவு, நம்பமுடியாத உயிரியல் எடுப்பும் (biological adaptation) நெடிய காலக்கெடுவில் தானாக சாத்தியப்படக்கூடியதே! என்று நம்பினர் இவர்கள். அது உண்மையாகவே இருக்கலாம். இயற்கைத்தேர்வு எனும் முறை நெடிய காலக்கணக்கில் கசடுகளைக் கழித்து, உயர்வானவற்றை தக்கவைக்கும் தன்மையதே. ஆயினும், இதற்காக பிரபஞ்ச காரணி என்ற ஒன்று தேவையே இல்லை என்று சொல்வதை என்னால் இப்போது கேள்வி கேட்கமுடிகிறது. அப்போது அந்த முதிர்ச்சியும், தெளிவுமில்லை.

அதுமட்டுமில்லை, அப்போது, இயற்கையை ஆராய்வதற்கு இப்போதுள்ள வசதிகளும் இல்லை. நவீன தொழில்நுட்பம் வழங்கியிருக்கும் அளப்பரிய வசதியால் இயற்கையின் சந்து, பொந்திற்குளெல்லாம் புகுந்து படமெடுக்க முடிகிறது. மிகவும் கொடூரமான விலங்குகள் என்று நம்பியிருந்த விலங்குகளெல்லாம் ‘இதயம்’ உடைய (ih love & compassion) விலங்குகளே. அன்பு காட்டினால், பிரதி அன்பு செய்யக்கூடியவையே என்பதை நவீன உயிரியல் ஆவணமாக்கிக் காட்டியிருக்கிறது!

உதாரணமாக சிங்கம், புலி, ஓநாய், கழுதைப்புலி, சிறுத்தை இவையெல்லாம் வீட்டு நாய் போல் பழகுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவற்றின் குடும்ப வாழ்வை நோக்கினால், தாய்மை என்பதைப் பூரணமாகக் காணமுடிகிறது. குடும்ப வாஞ்சை என்பதில் மனிதருக்கு எவ்விதத்திலும் அவை சளைத்தவை இல்லை என்று தெரிகிறது.

பின் ஏன் இந்த, Survival of the fittest மற்றும் Wildlife is full of killing and violence என்ற ஒரு அபிப்பிராயம்? காரணம் விலங்குகள் வேட்டையாடுவதை மனிதன் காணும் போது அது கொடூரமாக இவனுக்குத் தோன்றுகிறது. ஆனால், கொடிய விலங்குகள் என்று பெயர் பெற்றுவிட்ட விலங்குகள் இரை தேடுவது என்பது சாதாரண விஷயமில்லை. 10 முயற்சியில் ஒரு முயற்சிதான் பலிக்குமாம். அவை பல வாரங்கள் பட்டினி கிடக்கும் நிலமையுமுண்டு. எனவே, இப்போதெல்லாம், படமெடுக்கும் போது, அப்பாவியான மான் குட்டியை ஒரு சிறுத்தை கொல்கிறது என்றால் படமெடுப்பவர் தடுப்பதில்லை. ஏனெனில் அங்கு, நாலு சிறுத்தை குட்டிகள் தாய் கொண்டுவரும் உணவிற்காக ஏங்கி நிற்கின்றன. உண்மையில் சாகபட்சிணிகளைவிட, சிறுத்தை, புலிக்குட்டிகள் உயிர்பிழைத்து பெரியவைகள் ஆவது துர்லபம் என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. எனவே அங்கு நடப்பது எதுவும் கொடுமையானதல்ல.

அடுத்து, இவைகளைப்படமெடுக்கும் போதுதான் தெரிகிறது, நமக்கும் அவைகளுக்கும் எவ்வளவு ஒற்றுமைகள் உள்ளன என்று. யானையைப் பலவருடங்களாக ஆவணப்படுத்தும் ஆய்வாளர் சொல்கிறார், ஒவ்வொரு யானையும் ஒருவிதம். கூச்சமான யானைகளுண்டு, சவுடால் யானைகளுண்டு, முரட்டு யானைகளுண்டு. இப்படி, எத்தனை குணங்களை நம்முள் காணமுடியுமோ அத்தனையும் அங்குண்டு. உண்மையில் அங்கிருந்துதான் நமக்கு, வழி, வழியாய் வந்திருக்கின்றன.

இயற்கையில் பிறக்கும் போதே யார் நண்பன், யார் எதிரி என்று தெரிந்துவிடுகிறது. ஒரு யானைக்குட்டி ஒரு மானை, பகைவன் என்று கருதுவதில்லை. ஒரு மான், வரிக்குதிரையை எதிரி எனக்காண்பதில்லை. ஆனால், குள்ள நரியானாலும் அது பகைவன் என்று தெரிந்துவிடுகிறது. அதன் பல்லைப் பார்த்தா தெரிகிறது? இல்லை! உள்ளுணர்வு. அது என்ன உள்ளுணர்வு?

மலேசியாவில் ஏதோவொரு அநாமத்தான கடற்கரையில் முட்டை வைத்து, குஞ்சு பொறித்துவிட்டால், இந்தக்குஞ்சு பெரிதாகி உலகில் எங்கிருந்தாலும் அதே கடற்கரைக்கு வந்து முட்டை இடுகிறது. முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு யார் சொல்லித்தந்தது? சாலமன் மீன் வருடாவருடம் சொல்லொணா இடர்களைத்தாண்டி, எதிர்நீச்சல் போட்டு கடலிலிருந்து, ஆற்றுக்கு வந்து, மலையருவி தாண்டி, எங்கு முட்டை பொறித்ததோ அதே குட்டைக்கு வந்து முட்டை பொறித்து சாகிறது. ஆம், முட்டை பொறித்தவுடன் அதுவரை உயிரைப்பிடித்துக் காத்திருந்த ஏதோவொரு வலு, போய் விடுகிறது. பட்டென மல்லாக்க செத்து மிதக்கிறது? என்ன அதிசயம்? என்ன ஒழுங்கு?

இந்த உயிரியல் ஒழுங்கு, பிற பிரபஞ்ச ஒழுங்கிலிருந்து மாறுபட்டிருக்கிறதா? எல்லாமே ஒரு ஒழுங்கில் ஊழி, ஊழியாக செயல்பட்டு வருகின்றன.

எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார்கள். உயிரியல் பரிணாமம் என்பது ஒரு செல் உயிரியிலிருந்து பல செல் உயிரிக்கு வளர்ச்சியடைதல் என்று. ஓரரறிவுப் பிராணியிலிருந்து, ஆறறறிவுப் பிராணியாக மாறுவது பரிணாமமென்று. இத்தனை நாள் நம்பியிருந்தேன், ஆழ்வார்களை அறியும் வரை!

முட்டை ஒரு செல்தான். கருவுறுதல் என்பதைப் போன்றதொரு மந்திரச்செயல் உலகில் வேறேதுமில்லை. நேற்று யானை கருவுறுதலைப்பற்றிய படம் பார்த்தேன். நம்மைப் போல் கட்டிப் புரண்டு கலவி செய்ய யானையால் முடியாது. தாட்டியான உடம்பு. எனவே யானைக் கலவி என்பது சில விநாடிகளில் முடிந்துவிடுகிறது. ஆனால் 500 மிலிலிட்டர் விந்துவைப்பாய்ச்சுகிறது யானை. இதில் மனித விந்தணு போல் 10 மடங்கு அதிகம் விந்துக்கள் உள்ளன. ஆயினும் அவை மனித உடலைப் போலல்லாமல் யானையின் உடலுக்குள் சென்று கருவுறச்செய்வதற்குள், மிகக்கடினமான பாதைகளை, தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது. இத்தனை கோடி விந்துவில் கடைசியில் ஒரேயொரு விந்து குட்டியானை உருவாகக் காரணமாகிறது. கருவுற்ற பின் 22 மாதங்கள் கர்பவாசம்! அப்பாடா! என்றிருக்கிறது. இதைவிட பெரிய விந்தை என்னவுள்ளது?

அறிவு என்பது பெரிய காவியம் பாடுவதில் மட்டும் உள்ளதா?
அறிவு என்பது பெரிய பாலம் கட்டுவதில் மட்டும் உள்ளதா?
அறிவு என்பது அணுகுண்டு செய்து பல்லாயிரம் மக்களை மாய்ப்பதில் மட்டுமுள்ளதா?

ஆராய்ந்து பார்த்தால் அறிவு என்பது பூரணமாக எங்கும் வியாபித்து இருப்பதே உண்மை. அது ஒரு கொசுவின் உடம்பில் சைதன்யமாக இருப்பது அதிசயம். அதே அறிவு ஒரு டைனோசார் உடம்பில் வாழ்ந்தது அதிசயம். ஒரு செல் பாக்டீரியாவிற்கு அறிவில்லையா என்ன? எங்கில்லை அறிவு.

ஒவ்வொரு உயிரும் தத்தம் விதிவகை பிரபஞ்ச ஒழுங்கில் செயல்பட்டு வருகின்றன. யானை, யானையாகவே வாழ்கிறது. கழுதைப்புலி போல் கடித்துக் கொதறுவது இல்லை. அது, அதற்கு ஒரு தர்மம். புலி கொல்லும் போது, பிராண வேதனை அதிகமில்லாமல் குரல்வளைக் காற்றை ஒரே கடியில் வாங்கிக் கொல்கிறது. ஆனால் கழுதைப்புலி கிடைத்த இடத்தில் கடித்துக்கொதறுகிறது. சாகும் மான் பாதி உடல் போன பின்னும் மிரண்டு தவிக்கிறது. சிங்கம் ஒரே அடியாக பிடறியில் அறைந்து ஒரு நொடியில் கொன்று விடுகிறது. ஆனால், குழவி ஒரு புழுவை உயிருடன் பிடித்து, அதை ஒரு ஊசி போட்டு அப்படியே பதப்படுத்தி, தன் குஞ்சு பொறித்தவுடன் சுடச்சுட சாப்பிடும்படி செய்கிறது?

இதற்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தது யார்? இவ்வளவு சூட்சுமம் உள்ளே எப்படிப் போனது?

பரிணாமம் என்ற கொள்கையே உண்மையா? என்ற கேள்வி வந்துவிட்டது இப்போது! இத்தனை நாள் நான் எழுதிவந்த மடல்களில் சொல்லிய பரிணாமம் உண்மையா? நான் படித்த பாடம் உண்மையா?

இல்லை! என்று தோன்றுகிறது. அறிவு பூரணமாக எங்கும், எப்போதுமுள்ளது. அது எடுக்கும் உயிர் நிலைக்கு ஏற்றவாறு பல்வேறுவகையில் தன்னை வெளிக்காட்டிக்கொள்கிறது.

அவரவர்தமதமது அறிவறிவகைவகை
அவரவரிறையவர் எனவடியடைவர்கள்
அவரவரிறையவர் குறைவிலரிறையவர்
அவரவர்விதிவழி அடையநின்றனரே

எனும் திருவாய்மொழி ஏதோ நமக்குச் சொல்லியது போல் படுகிறது. ஆனால், இதையொரு பிரபஞ்ச விதிபோல் சொல்லிச்செல்கிறான் மாறன் சடகோபன். ஒவ்வொரு உயிரியும் தத்தமது அறிவு வகையென ஒரே பிரபஞ்ச அறிவைப் பிரதிபாலிக்கிறது. அறிவு வகையாக நிற்கும் போது அவையவைக்கு இட்ட கட்டளையைச் செய்து முடிக்கின்றன. முதலையாகப் பிறந்தால் கடித்துக்குதறுவதில் தவறில்லை. அது, அதன் சுயதர்மம். ஆனால், மனிதனாகப் பிறந்துவிட்டு அவனுக்கு இட்ட விதியை அறியாமல் விலங்கு போல் வாழ்வது தவறு. வேடிக்கையாகச் சொல்லுவார்கள், எறும்பாகப் பிறந்துவிட்டால் எறும்புக்கடவுளுண்டு என்று. அவரவர் இறையவர், குறைவிலர். ஆயினும் இவையெல்லாம் கடைசியில் அடைகின்ற ஒரு பாதம் இறைவன் ஒருவன்தான்.

ஏனப்படி சொல்ல வேண்டும்?

எல்லா உயிர்களின் அடிநாதமாக தழுவல், கூடல், கலத்தல், உயிர்த்தல், என்று இருக்கிறது. இவையாவும் செய்யும் போது அன்பு ஒன்றே பிரதானமாக இருக்கிறது. வாழ்வு அனைத்துமே அந்த ஒரு கணத்திற்குத்தான். அப்போது காணும் இன்பம் பல்வேறாகப் பேசபடுகிறது. வாலை இன்பம். தந்திரம் என்று. மனித வாழ்வு என்று வரும் போது தனியாக இருந்து போகக்கூட்டு இல்லாமலே இதை அடையவும் முடிகிறது. அதை யோகம், சமாதி, சத்தோரி என்கிறோம்.

எபடிச் சொன்னாலும், எல்லா இயக்கத்திற்கும் ஆதாரமாக உள்ளது, அன்பு ஒன்றுதான். இதைக் கண்டு பிடித்துவிட்டனர் நம் முன்னோர்கள்.


சூதனாய்க் கள்வ னாகித்
தூர்த்தரோ டிசைந்த காலம்,
மாதரார் கயற்க ணென்னும்
வலையுள்பட் டழுந்து வேனை,
போதரே யென்று சொல்லிப்
புந்தியில் புகுந்து, தன்பால்
ஆதரம் பெருக வைத்த
அழகனூ ரரங்க மன்றே?


இதற்கு வேறொரு வாசிப்பு கொடுத்துப் பாருங்கள். சூதனாய், கள்வனாய் என்பதை பல்வேறு பிறவி என்று கொண்டால், பல்வேறு வகையான உயிர் வலையில் பட்டிருந்த போதும், அவன் புந்தியில் புகுந்து, தன்பால் ஆதரம் பெருக வைத்துக்கொண்டுதான் இருக்கிறான்.

விலங்கிற்கு மனது இல்லையென்று யார் சொன்னது?

நரகும் சுவர்க்கமும் நாண்மலராள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் - துரிசற்றுச்
சாதகம் போல் நாதன் தனருளே பார்த்திருத்தல்
கோதில் அடியார் குணம்.


என்பது நமக்குச் சொன்னது? என்று எப்படிக் கொள்வது. பெரும்பாலான விலங்கு வாழ்வு அவனிட்ட வழக்காய், அவனருள் வேண்டித்தானே! இருக்கிறது திறந்த வெளியில், உண்ணக்காத்திருக்கும் விலங்கின்றும் காத்து ஒரு மான் குட்டிக்குப் பிரசவம் பார்ப்பது யார்? குட்டிக்கு பிறந்தவுடனே தத்தி, தத்தி நடக்கப்பண்ணுவது யார்? இயற்கையில் காணும் அத்தனை விலங்கியல் தந்திரங்களையும், சூட்சுமங்களையும் கற்றுக் கொடுப்பது யார? புலிக்கு கடிக்கத்தெரியுமென்றால் மானுக்கு ஓடத்தெரியும். சிங்கத்திற்கு அடிக்கத்தெரியுமென்றால் முள்ளம் பன்றிக்கு அடிக்கவிடாமல் தடுக்கத்தெரியும். கிட்ட வந்தால் ஒரு ஓட்டிற்குள் நுழைந்து கொள்ளும் தந்திரம் நத்தைக்கும், ஆமைக்கும் சொல்லித்தந்தது யார்? அவை யாரிட்ட வழக்கிற்கு வாழ்கின்றன?

அரங்கன் கோயிலில் ஒரு சிற்பி. செதுக்கிக்கொண்டிருக்கும் போது, உளி பட்டு, கல் சிதற, உள்ளிருந்து சிறு தேரை தாவி ஓடியது. அது கண்ட சிற்பி, அப்படியே விட்டான் வேலையை! கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் வாழ்வளித்து காக்கும் ரங்கன் இனி என்னையும் ரக்ஷிக்கட்டுமென்று.

”துரிசற்றுச் சாதகம்போல் நாதன் தனதருளே பார்த்திருக்கும் கோது இல் அடியார் குணம்".

என்பது இதுதான். நம்மைச் சூழ்ந்து அவனுள்ளான். அவனுள் ஐக்கியத்தின் ஐக்கியமாய் நாமுள்ளோம்.

இன்று, இப்பொழுதே போகட்டும் வல்லுயிர் சாபங்கள்! கலி கெடட்டும். அவை நைந்து போன நமனுக்கு. நமக்கில்லை என்று உழிகொண்டு வாழ்வோம். வாழ்க! வாழ்க!!

27 பின்னூட்டங்கள்:

  Anonymous

Friday, May 15, 2009

excellent article.

  ஏ.சுகுமாரன்

Friday, May 15, 2009

அற்புதமான அலசல் ! எனக்கு கூட இந்த சந்தேகம் வருவதுண்டு .
அனால் எப்படி பிராணிகளிடம் போய் கேட்டு அதை ஊர்ஜிதப் படுத்துவது
என விசனமுண்டு .

ஆமாம் நிச்சயம் பிராணிகளுக்கும் மனம் உண்டு ஆனால் மனிதனுக்கு
இருப்பது போல் புத்தி சித்தம் மட்டும் இல்லை என நினைக்கிறேன் .
மனம் என்ற சமஸ்ககார பதிவு சேமிப்பு ஜன்ம ஜென்மமாக அதற்கும் தொடர்கிறது .
அதனால் தான் அது யாரும் சொல்லித்தராமல் இரை தேடுகிறது .
வேட்டையாடும் குணம் , பிரபஞ்சம் முழுவதும் உள்ள அன்பு
இத்தனையும் உண்டு . நான் எனும் அகங்காரமும் உண்டு .
ஆனால் பிராணி மனதிற்கு என்ன பெயர் மனிதனிடம் இருப்பதால் மனம் , பிராணியிடம் இருப்பதால் ........?
அன்புடன்
ஏ சுகுமாரன்

  நா.கண்ணன்

Friday, May 15, 2009

சுகு: பிராணிகளுக்கு மனமுண்டு எனும் என் கட்டுரை வருகின்ற யுகமாயினி மலரில் வெளியாகும். வந்த பின் இங்கு வெளியிடுகிறேன்.

கண்ணன் கீதையில் சொல்வது போல், குணப்பாகுபாடு மட்டுமே எல்லா உயிர்களுக்கும் பொது. பரிணாமம் இருப்பது போல் தெரிவது `தோற்றப்பிழை`. ஏனெனில் காலம் என்பது அம்பு போல் பாய்வதாகத் தெரிவது தோற்றப்பிழை. இதை A Brief History of Time எனும் புத்தகத்தில் Stephen Hawking விளக்கியிருப்பார். காலமே ஓடுவதில்லை எனும் போது பரிணாமம் எப்படி? எல்லாம் பெரிய விளையாட்டு! அலகிலா விளையாட்டு!!

  வடுவூர் குமார்

Friday, May 15, 2009

மிருகங்களும் வீட்டில் வைத்து பழக்கலாம், அவைகளுக்கும் அன்பு உண்டு என்பதை ஒரு நகர் படத்தில் காண முடிந்தது.சிங்கத்தை குட்டியில் இருந்து பழக்கிவிட்டு கொஞ்சம் பெரியதாக ஆனவுடன் காட்டில் வீட்டு விட்டு பல வருடங்கள் கழித்து அவைகளை காண வந்த வளர்தவர்களை அது கண்டு கொண்டு கொஞ்சிய விதம்....ஆஹா! காண கண் கோடி வேண்டும்.

  வடுவூர் குமார்

Friday, May 15, 2009

மாயை பற்றிய பேச்சு வரும் போது காஞ்சி பெரியவரின் "தெய்வத்தின் குரல்" யில் அழகாக சொல்லியுள்ளார்.

  நா.கண்ணன்

Friday, May 15, 2009

குமார்: Born Free எனும் படம் இதன் அடிப்படையில் எடுத்ததுதான். இதன் பாதிப்பில் நானொரு சிறுகதை எழுதியிருக்கிறேன். சிங்கப்பெருமாள் எனும் தலைப்பில்.

அன்பு ஒன்றுதான் அனைத்திற்கும் அடிப்படை. அழிவிற்குக்காரணமும் அன்பே. இல்லையெனில் சம்ஹாரமுர்த்தியை நாம், `அன்பே சிவம்” என்று சொல்ல மாட்டோம். அன்பே அழியா உண்மை. அனைத்திற்கும் ஊற்று.

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Friday, May 15, 2009

//பாவம் அவரும் வெள்ளையடிக்க, அடிக்க, இவனும் அழுத்தமாக எழுதிவைப்பான்//

ஹா ஹா ஹா
வாளால் அறுத்துச் சுடினும், சண்முகப்பட்டர் தன் முயற்சியில் மனம் தளராம இருக்காரா-ன்னு பார்க்க எழுதிய அந்த தி.க.காரன் அல்லவோ பிரபன்ன வினையூக்கி? :)))

சண்முகப் பட்டர் பதிலுக்கு வெள்ளையடித்து இருக்கக் கூடாது!

"கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று இங்கு எழுதி ஒட்டிய அறிவாளியை, அறிவாளி என்று ஒப்புக் கொள்கிற நான் முட்டாள் அல்ல!"-ன்னு எழுதி வச்சிருக்கணும்! :)
அப்பறம் தெரிஞ்சிருக்கும் ஆட்டம்!:)

  நா.கண்ணன்

Friday, May 15, 2009

கண்ணபிரான்: உமக்குத்தான் இப்படியெல்லாம் யோசித்து, எழுதத்தோன்றும். அடுத்தமுறை போகும் போது பட்டரிடம் சொல்கிறேன்:-)

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, May 16, 2009

//எவ்வளவு, நம்பமுடியாத உயிரியல் எடுப்பும் (biological adaptation) நெடிய காலக்கெடுவில் தானாக சாத்தியப்படக்கூடியதே! என்று "நம்பினர்" இவர்கள்//

ஹிஹி! அவங்களுக்கும் "நம்பிக்கை" தானா? :)

//ஆயினும், இதற்காக பிரபஞ்ச காரணி என்ற ஒன்று தேவையே இல்லை என்று சொல்வதை என்னால் இப்போது கேள்வி கேட்கமுடிகிறது. அப்போது அந்த முதிர்ச்சியும், தெளிவுமில்லை//

உண்மை தான் கண்ணன் சார்!
பகுத்தறிவையும் பகுத்து அறியும் போது தான் இறைவனின் atomicity புரிகிறது!

நேற்று டீம் லஞ்ச்சில், சாப் ஸ்டிக் கொண்டு சாப்பிடும் போது ஒரு யோசனை! ஸ்பூனில் உண்பதை விட ஃபோர்க்கில் உண்ணும் போது, உணவுப் பொருள் எடுக்க சுலபமாய் இருக்கு! அதே போலத் தானே மனிதனின் கை விரல்கள் என்னும் படைப்பு!

இது இயற்கையின் கூறுபாடு என்று நாத்திகப் பகுத்தறிவாளர் (அ) ஆத்திகப் பகுத்தறிவாளர் சொல்வதும் சரி தான்! ஆனால் ஒரு எந்திரனுக்கு (Robot)-க்கு Wrist Design பண்ணவென்றே அத்தனை தொழில் நுட்பத்துடன் யோசித்து அமைக்க ஒரு கர்த்தாவும் வேண்டி இருக்கே!

எந்தப் பொருளைக் கண்டாலும் அதுக்கு காரணம், கர்த்தா என்று இரண்டு தேவைப்படுகிறதே!

ஆயிரம் தான் இயற்கையின் மூலக்கூறு என்று மனித விரல்களை வாகாக அமைத்திருந்தாலும், அப்படி அமைய ஒரு "திட்டம்" வகுத்தது யார்?

பூமியும் சந்திரனும் அதனுடன் இதர கோள்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் இவ்வளவு ஆற்றலில் தான் சுழல வேண்டும் என்று அளவு நிர்ணயம் எதனால்? யாரால்?
F = G*(m1*m2)/(r^2) என்று Gravitational constant-க்கு இது தான் அளவு என்ற நிர்ணயம் எதனால்?

மனுஷன் ஓட்டும் டிராஃபிக்கிலேயே, இத்தனை கண்காணிப்புக் காவலர்கள் இருந்தும், இத்தனை குளறுபடிகள்...எப்பவாச்சும் மக்கர் ஆகி விடுகிறது!
அனந்த கோடி அண்டங்களின் டிராஃபிக் பற்றி என்ன சொல்ல?

ஜகத் காரணமஸ்து எவனோ அவனே கர்த்தா!
காரணம்-கர்த்தா என்பதும் அறிவியலே!

பகுத்தறிவையும் பகுத்து அறிந்து கொண்டால், இனி எல்லாம் சுகமே! :)

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, May 16, 2009

//இத்தனை கோடி விந்துவில் கடைசியில் ஒரேயொரு விந்து குட்டியானை உருவாகக் காரணமாகிறது. கருவுற்ற பின் 22 மாதங்கள் கர்பவாசம்! அப்பாடா! என்றிருக்கிறது. இதைவிட பெரிய விந்தை என்னவுள்ளது?//

அருமை கண்ணன் சார்!
ஆணின் விந்தணு முட்டையுள் சேரும் போது, ஜீவன் உருவாகிறது, சரி! ஆனால் அந்த ஜீவனுக்கு, தான் ஜீவன் என்ற பிரக்ஞையை ஊட்டுவது எது? எந்தக் கட்டத்தில் இயற்கையின் தொழிற்சாலையில் "தானாகவே" உருவாகும் ஒரு தயாரிப்புப் பொருளுக்கு, "தான் ஜீவன்" என்ற பிரக்ஞை உதிக்கிறது?

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்...

  kannabiran, RAVI SHANKAR (KRS)

Saturday, May 16, 2009

//எறும்பாகப் பிறந்துவிட்டால் எறும்புக்கடவுளுண்டு என்று. அவரவர் இறையவர், குறைவிலர். ஆயினும் இவையெல்லாம் கடைசியில் அடைகின்ற ஒரு பாதம் இறைவன் ஒருவன்தான்//

அதே! அதே!
இங்கு மிகக் கவனமாகப் படிக்க வேண்டிய நம்மாழ்வாரின் வரி...

அவரவர் இறையவர் என "அடி" அடைவர்கள்!

அவரவர், அவரவர் இறையவரை அடைவதில்லை!
அவரவர், ஒன்றேயான, ஏக தீபிகையான "அடி"-யை அடைகின்றார்கள்!

அதான் திருவாய்மொழியில் துயர் அறு சுடர் "அடி" தொழுதெழன் மனனே!

  DHIVAKAR

Saturday, May 16, 2009

கண்ணன், வாழ்க்கைக் கோணங்களில் நீங்கள் எந்த நோக்கில், எந்த இயலிலும் பார்த்தாலும் அங்கே சடகோபன் பாடல் அங்கே பொருந்தும்.

மனிதகுலத்துக்கே ஒரு பாஸிடிவ் அப்ப்ரோச் நம்மாழ்வார் பாடல்கள். இதைத் தெரிந்தோர் தெளிவர்.

வேறு எந்த மொழியிலும் இல்லாத வேதமல்லவா.. பக்தருக்கு பகவான் எளியவன். நீங்கள் பரமபக்தர். ஆகையினால் உங்கள் வாக்குக் கூட தெய்வ வாக்காக எடுத்துக் கொள்ளவேண்டும்தான்,

அன்புடன்
திவாகர்

  R.DEVARAJAN

Saturday, May 16, 2009

//சாதகம் போல் நாதன் தனருளே பார்த்திருத்தல்//

உயிர்ப் பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு ப்ரபந்நனுக்கு
இதுதான் ஸ்வதர்மம் என்று காட்டித் தந்தனர் போலும் !

தேவ்

  Anonymous

Saturday, May 16, 2009

பூரணமாக வியாபித்திருப்பது ஞானம். நேரடியாக கல்வி மூலம் பெறுவது அறிவு. ஞானம் பெற கல்வி தேவையில்லை. உடல் நலமோ, மனநலமோ கூடத் தேவையில்லை.
பிரபஞ்சத்தின் ரகசியங்கள் சிலருக்கு இயல்பாகவே அறிமுகமாகிறது. ரெக்சைப்பற்றி என்ற ஒளிக்கோப்பு, இணையத்தில் இருக்கிறது.

http://www.cbsnews.com/
stories/2005/10/20/
60minutes/main957718.shtml

Right side of our brain has access
to the secrets of the universe.
Prayer and meditation is about
enlivening the right side of the
brain. There are many recorded
facts that, people with severe
neurological disorders have talents
that a normal human being can
only think of. The left side of their brain is severely affected.

Is knowledge restricted to the brain or the human brain has the ability to refer to a higher source, like a
computer accessing a server. The
later is true!

Didn't you write that Nammalwar
was born with some disabilty.
I tend to speculate that he was
gifted with full access to
Nature's knowledge database!

  நா.கண்ணன்

Saturday, May 16, 2009

தேவ்: `பொலிக, பொலிக,பொலிக` பாசுரத்தின் அடிநாதம் இக்கட்டுரை உதித்தபோது அறிந்து கொண்டேன். பரமஞானத்தில் பதித்த முத்துப்போல் நாம் இருக்கிறோம் என்று அறியும் போது, கலி, மரணம், துக்கம் இவையெல்லாம் நசிந்த நமனுக்கு, இங்கு யதொன்றுமில்லை! என்பது தெள்ளத்தெளிவாயிற்று. மானுட தர்மம் என்னவெனில் இதைப் புரிந்து வாழ்தல்தான். இப்புரிதலுக்குக் காரணம் கடல்வண்ணன் பூதங்கள் மலியப் புகுந்ததுதான். இனிமேல் ஆனந்தம் (உழி)தான். வெட்டவெளியில் கன்றீனும் மானிற்கு துணை நிற்கும் பரம் நம்மை விட்டுப் போகும் என நினைப்பதுகூடப் பாவம்! பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்!

  நா.கண்ணன்

Saturday, May 16, 2009

அன்பின் அநாமதேயரே! நான் சுட்டுவது பரமஞானமே. இதைப்பேரறிவு என்று சொல்லும் வழக்குண்டு. படித்து அறிவதைப் பட்டறிவு என்பாருமுண்டு. நான் அது பற்றிப் பேசவில்லை. நம்மாழ்வாருக்கு எந்த உடற்குறையுமில்லை. பிள்ளைப்பிராயத்தே பரமனருள் பூரணமாய் பெற்று 16 வருடம் யோகத்தில் கழித்தவர். அவருக்கு தாய் தந்தையர் வகுளமாலை சூட்டி மகிழ்ந்ததால் அவரை `வகுளாபரண நாயகி` (நாயகி பாவத்தில் இருப்பதால்) என்பர். நீங்கள் சொல்லும் உதாரணம் அஷ்டவக்ரன் எனும் ஒரு ரிஷிக்குச் சொல்வர். இந்த நூற்றாண்டில் Stephen Hawking என்பார் அப்படி இருக்கிறார்.

  Karthigesu

Saturday, May 16, 2009

கண்ணன்,

இந்தக் கட்டுரையை ஒரு பொருத்தமான scientific journalஇல் இட்டால் என்னவிதமான பின்னூட்டம் வரும் என நினைக்கிறீர்கள்?

ரெ.கா.

  நா.கண்ணன்

Saturday, May 16, 2009

அன்பின் ரெ.கா:
இதனை முதலில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரிக்கமுடியாது. ஏனெனில் இங்கு ஒரு மாற்றுக் கண்ணோட்டம் மட்டுமே சொல்லப்படுகிறது. குறைந்தது 100 ஆண்டுகளாக established fact என்று அறிவியல் உலகில் நம்பப்படும் ஒரு கொள்கையை அவ்வளவு எளிதாக அசைத்துவிடமுடியாது.
ஆனால், அறிவியல் தத்துவத்தை நம்பி இருப்பதால் ஆழ்வார்கள் தத்துவத்தை முன் வைக்கலாம். இதை அறிவியல் உண்மையாக்க நிருவன ஆதரவும் (அறிவியல் முற்றும் நிருவனப்பட்டுவிட்டது), தொடர்ந்த ஆவணச் சேர்ப்பும், அவதானமும் வேண்டும். அது நிகழலாம், நிகழாமல் போகலாம். ஹாக்கிங் காலம் நிரந்தரம், ஓடுபாய்வதில்லை என்பதை அறிவியல் எப்படி எடுத்துக்கொண்டுள்ளது என்பதிலிருந்து இதை ஒருவகையில் அனுமானிக்கலாம். அறிவியலிலேயே ஊடுதுறைக் கருத்துப்பறிமாற்றமமும் புரிதலும் மிக, மிக சாவதானமாகவே நடைபெறுகிறது. எனவே கற்றையியலின் தாக்கம் உயிரியலை எவ்வளவுதூரம் பாதித்துள்ளது என்பது இன்னும் அறியப்படவில்லை.

  நா.கண்ணன்

Saturday, May 16, 2009

Rex musical talents ஆவணம் பார்த்தேன். கடைசியில் கண்ணீர்விடும் ரசிகர் போல் உள்ளம் விம்பித்தணிந்தது. கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் அருள் சுரக்கும் வள்ளல்தான் அக்குழந்தைக்கும் அருள்கின்றான். அவன் ஆசிரியர் சொல்வது போல், உடல்குறைவான நோக்கை விட்டு, நாம் எப்படி இசையை ரசிக்கிறோம்? என்று கேட்டாலே பதில் இல்லைதான்! நன்றி.

  நா.கண்ணன்

Sunday, May 17, 2009

நன்றி திவாகர்! உங்கள் கேள்விகள், ஆதரவு இவைகளின் ஒத்திசைவுடன்தான் பாசுரமடல்கள் மலர்கின்றன.

  நா.கண்ணன்

Sunday, May 17, 2009

கண்ணபிரான்: குச்சி வைத்துச்சாப்பிடும் நாட்டில் வாழ்கிறேன். இவர்களுக்கு கையில் சாப்பிடுவது அசிங்கம். அதை மறுதலித்துச் சொல்லும் போது விளக்குவேன். சாப்பிடல் எனும் செயல் ஐம்புலச் சேர்க்கையால் நடைபெறுகிறது. நல்ல உணவின் வாசனை மூக்கில் நுழைந்தவுடனேயே ஆசை பிறந்துவிடுகிறது. தட்டில் கண் பார்க்கும் தூரத்தில் வரும்போது நாக்கில் எச்சில் ஊறத்தொடங்குகிறது. கை தொட்டவுடன் சாப்பாட்டின் தன்மை புரிந்துவிடுகிறது. அரிசி பதமாக வெந்து இருக்கிறதா? இட்லி இன்னும் மாவாக உள்ளதா? தோசை முறு, முறுப்பு போதுமா? இத்யாதி..பிறகுதான் உண்மையான சுவைத்தல் ஆரம்பமாகிறது..என்று எண்ணுகிறோம். உண்மையில் வாசனை பார்த்தவுடனேயே சாப்பிடத்தொடங்கிறோம். கையினாலும் சாப்பிடுகிறோம் என்பதே உண்மை!

  கிருஷ்ணமூர்த்தி

Monday, May 25, 2009

ரெ.கா ஐயா,

இந்தப் பதிவை அறிவியல் ஆராய்ச்சி இதழுக்கு அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும்.இங்கே இணையத்திலேயே, தமிழ் வலைப்பதிவுகளில் என்ன பதில் கிடைக்கும் என்பதை கீழே சுட்டியில் உள்ள பதிவைப் பார்க்கலாம்.

இரண்டாவதாகப் பின்னூட்டமிட்டிருப்பவர் இதை science-less shit என்று அவதானித்திருக்கிறார். அறிவியலை அவர் கொண்டாடும் விதம் அப்படி.http://www.ariviyal.info/?p=510
//#

VN permalink

பாகம் 2: 003 பரிணாமம் உண்மையா?

http://thirumozi.blogspot.com/2009/05/blog-post.html
#
2009 May 19
NV permalink

read science-less s*** in above link and read also this: Why People Believe Invisible Agents Control the World - A Skeptic’s take on souls, spirits, ghosts, gods, demons, angels, aliens and other invisible powers that be//

அவரவர் புரிந்து கொள்கிற விதத்தில் புரிந்து கொண்டு போகட்டும் என்று விட்டு விட வேண்டியது தான். அறிவியலையும், ஆன்மீகத்தையும், ஒன்றாக்கி அவியல் செய்து தான் தீர வேண்டுமா என்பது தான் எனக்கு எழுகிற கேள்வி!

  R.DEVARAJAN

Wednesday, May 27, 2009

//வெட்டவெளியில் கன்றீனும் மானிற்கு துணை நிற்கும் பரம் நம்மை விட்டுப் போகும்
என நினைப்பதுகூடப் பாவம்! //

உள்ளத்தை ஊடறுக்கும் உயர்ந்த சிந்தனை ! மேலோர் கடற்கரை வெளியை நினைத்திருக்க உபதேசித்தனர். வானர முதலிகள் கவலையற்றுக் கடற்கரை மணலில் உறங்கிக் கொண்டிருக்க, வில்லும் கையுமாகப் பெருமாள் சுற்றிச் சுற்றிக் காவல் புரிந்தாராம்.

தேவ்

  Anonymous

Monday, June 01, 2009

காற்றோ நெருப்போ யாருக்கும் சொந்தமில்லை. ஆன்மீகமும் அப்படியே. எதையும் சார்பு நிலையிலிருந்து பார்ப்பது இயல்பாக வருவதுதான். அதற்காக ஆன்மீகத்தினால் மானுடத்திற்கு பல உபயோகப்படக் கூடிய விடயங்களை அறிந்து கொள்ளாமல் போவது நம்முடைய இழப்பு.
http://hagelin.org/about.html

  Anonymous

Tuesday, June 02, 2009

காற்றையோ நெருப்பையோ போல ஆன்மீகம் பலருக்கு அவசியமில்லாத ஒன்றுதான். ஆனால்
வாழ்க்கையில் பல சிக்கல்களிலிருந்து விடுபட வழி தேடும் போது ஆன்மீகம் உதவும், தீர்வு இல்லையென்றாலும் ஒரு புரிதலாவது கிடைக்கும். யோகப் பயிற்சி செய்பவர்களுக்கு நம்பிக்கை
இருந்தாலும் இல்லாவிட்டாலும் பலன் ஒன்றே. இந்த பயிற்சிகளுக்கு மத மூலம் பூசப்பட்டு அன்னியப்படுத்தப்படும் போது, மனிதன் ஒரு தீர்வை இழக்கிறான். மதம் என்ற வறையரைக்குள்
வந்துதான் ஆன்மீகத்தை அணுக வேண்டும் என்ற அவசியம் இல்ல. மனத்தை உள்நோக்கிச்
செலுத்தி பிரபஞ்சத்தின் மூலத்தை அணுக பல வழிமுறைகளைத் தருவது மதங்கள். அதில் பக்தி
வழி எளிய வழி. மனித உளவியலை நன்றாகப் புரிந்து கொண்டு அமைக்கப்பட்ட வழி.
தன்னை நிலை நிறுத்த வேண்டும், தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இயல்பாக வருவது. மனிதன் அறிவுபூர்வமாகச் சிந்திக்கிறேன் என்று சொன்னாலும் எதையும் உணர்வு பூர்வமாகத்தான் அணுகுகிறான். எதையும் உணர்ந்தால்தான் நம்புவேன் என்கிற நிலையெடுத்தால், மதங்கள் காட்டும் வழியில் சென்றால் இன்றோ அல்லது
நாளையோ கண்டிப்பாகப் புரிதல் வரும்!

  நா.கண்ணன்

Tuesday, June 02, 2009

நல்ல பார்வை அனானி. நன்றி.

  கார்பன் கூட்டாளி

Tuesday, August 10, 2010

நல்ல கேள்விகள்.