e-mozi

அருளாட்சியின் அருமை பெருமைகள்

ஜோசப் கேம்பல் தொன்மறைகளில் பொதிந்துள்ள உருவகப் பேச்சை அதன் உள்ள பொருள் தெளியும் படி சொல்லுவார். இது அவர் இந்தியவியல் கற்றுக்கொண்ட பின் தீவிரமானது. பிறப்பால் ஐரீஷ் கத்தோலிக்கர் என்பதால் அவருக்கு விவிலியம் அத்துபடி. ஒருமுறை ஏசுவின் வாழ்வின் நடந்த நிகழ்வொன்றைச் சொல்லிக்கொண்டு வந்தார். ஏசுவிடம் சீடர்கள் வந்து,’ஐயா! பரமபிதாவின் அருளாட்சி பூமியில் நடக்குமென்று சொன்னீர்களே! எங்கே?’ என்றனராம். ஏசு பதிலாக, ‘மூடர்களே! அவனது அருளாட்சியில்தான் இத்தனை காரியங்களும் நடந்து வருகின்றன. ஏன் உங்கள் கண்களுக்கு அது தெரியவில்லையா?’ என்றாராம்.

ஏன் நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதை விளக்கப் புக்கால் ஆன்மீகம் விரியும். எளிய பதில் ‘மாயை நம் கண்ணை மறைக்கிறது’ என்பதுதான். அது என்ன ‘மாயை’ என்று கேள்வி வரும், பின் அப்படியே தத்துவ விசாரம் விரியும்! அது நல்லதுதான். கேள்விகள் உவப்பானவை. நல்ல கேள்விகள் உவப்பானவை. முடிச்சுப்போடும் கேள்விகள் கேட்டு செக்குமாடு மாதிரி ஒரே இடத்தில் நின்று கொண்டு இருக்கக்கூடாது. எல்லாக் கேள்விகளுக்கும் விடை அக்கேள்வியிலேயே உண்டு என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

இவ்வளவு பேச்சும் எதற்கு என்றால், ஒரு பெரியவர் இருக்கிறார் அவரைக் காண்பதே அலாதி ஆனந்தம். ஆனால், நமக்கோ நேரமில்லை. தெருவில் போய்க்கொண்டு இருக்கும் போது போக்குவரத்தை நிறுத்தி அவர் வந்து எதிர் நின்றால் எப்படி இருக்கும்? நம் பயணம் தடை பட்டாலும், நாம் கண்டு ஆனந்திக்க வேண்டுமென்ற ஆவல் நிறைவேறி விடுகிறது இல்லையா?

அது போல்தான் பார்த்தசாரதி செய்தான். திருவல்லிக்கேணியில் அக்காவைப் பார்க்கப் போய் கொண்டு இருந்தேன். கோயிலுக்குப் போக நேரமில்லை. கோயில் பக்கம் வந்தவுடன் கார் மேலே போகாது நின்றுவிட்டது. ‘சரிதான், பெருமாள் புறப்பாடு போலும்’ என நினைத்து இறங்கி நின்றால் ஜில், ஜில்லென்று குதிரை வாகனத்தில் அவரே வந்து நிற்கிறார். இதைத்தான் ‘அருளாட்சி’ என்கிறார் ஏசு. நமக்கோ நேரமில்லை. அவரும் ரொம்ப பிசியான ஆசாமிதான். ஆனாலும் நமக்காக நேரம் ஒதுக்கிக்கொண்டு வந்து நிற்கிறார் எனில் அதை அருள் என்று போற்றுவதுதானே சரி.

சரி, அவர் உனக்கு மட்டும் வந்தார் என்று எப்படிச் சொல்ல? என்று கேட்கலாம். உண்மைதான் அவர் எல்லோருக்காகவும்தான் வருகிறார். ஆனால், எனக்குத்தான் அவர் என்னைப் பார்க்க வந்ததாகத் தோன்றுகிறது. கூடவே ஒரு அம்மாள். பாவம், அவளுக்கு என்ன அவசரமோ! இங்கும், அங்கும் நெளிந்து பெருமாள் கண்ணிலிருந்து படாமல் ஓடிவிட முயன்று கொண்டிருந்தாள். ஆனால் முடியவில்லை. வழியே இல்லை. கோபத்துடன் அவள் பெருமாள் இருப்பதையே கண்டு கொள்ளாமல் திரும்பி நடந்துவிட்டாள். அவளைப் பொறுத்தவரை அங்கு நடப்பது ‘அருளாட்சி’ இல்லை, வெறுமே போக்குவரத்து தொந்தரவு. அப்படியும் காணலாம்தான். நம் கண்ணில்தான் இருக்கிறது பார்வை. எனவேதான் மாணிக்கவாசகர் மிகச்சாதுர்யமாக, ‘அவன் அருளால் அவன் தாள் வணங்கி’ என்றொரு சொற்றொடர் போடுகிறார். அவன் நம்மைப் பார்க்க வருகிறான் என்று உணர வைப்பதும் அவனே. மாயையைக் கண்ணில் கட்டி விரட்டி விடுபவனும் அவனே. எனவேதான் நம்மாழ்வார் வைகுந்தம் போகிற வரைக்கும் தன் இயலாமை குறித்து வருந்தி, என்னை கடைசி நேரத்தில் ஏமாற்றிவிடாதே என்று புலம்புகிறார்.

மாயம்செய் யேலென்னை உன்திரு மார்வத்து மாலைநங்கை
வாசம்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்
நேசம்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம்செய் யாதுகொண் டாயென்னைக் கூவிச்கொள் ளாய்வந்தந்தோ.


இது கடைசிப் பத்து. அப்போதும் சந்தேகம்! ஏனெனில் விஷ்ணு மாயை என்பது காட்டமானது. பெரும் தவமிருந்து மனதைக் கட்டியதாய் நம்பி இருந்த ஒரு பெரும் முனிவருக்கு இறுதிக்காலத்தில் இறைவன் நினைவு வராமல் ஒரு மானின் மீது ஆசை வர, அவர் மானாகப் பிறந்ததாக ஒரு கதை சொல்வார்கள். இப்படியெல்லாம் செய்யக் கூடியவர்தான். இதனால்தான் பார்த்தார் இராமானுஜர், ‘நீ! ஏண்டா ஏதோ உன் சாமர்த்தியத்தால் சாதித்துவிடுவது போல் அலட்டிக் கொள்கிறாய்? பேசாமல், நிர்கதி என்று சொல்லி அவன் காலில் விழுந்துவிடு! பின் உன் நன்மை, தீமை எல்லாம் அவன் பழியாகிவிடும்’ என்று சொல்லிப் போந்தார். இராமானுஜ தரிசனத்தில் பரம சௌக்கியமுண்டு. ஏனென்று கேட்கிறீர்களா? உலகில் இதுவரை நீங்கள் பார்த்ததில், எங்காவது குட்டி/குழந்தை தன் முயற்சியில் தாயைப் பேணியதுண்டோ? தாய்தான் குட்டியை/குழந்தையைப் பேணுகிறாள். ஏனெனில் அவளுக்குத்தான் தன் குழந்தை மீது அக்கறை! (குரங்கு கட்டிக் கொள்கிறதே என்று கேள்வி வரும். அங்கும் பால் நினைந்தூட்டுவதும், குட்டியின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதும் தாய்தான். அது பிள்ளைக்கும் தெரியும். குட்டி இறந்து போனபின் அக்குட்டியை வைத்துக் கொண்டு அல்லாடும் ஆவணங்களெல்லாம் உண்டு. அப்போது குட்டி கட்டிக் கொள்ளவில்லை. தாய்தான் யாரையும் அண்டவிடாமல் காக்கிறாள் (குட்டி இறந்துவிட்ட பின்னும்))

எனவேதான் சொன்னேன், ‘பார்த்தசாரதி என்னைப் பார்க்க வந்தான்!’ என்று. ஏன் வந்தான்? அவனை ஸ்ரீரங்கத்தில் காண வேண்டுமென்று ஆசை. மலை வையாவூரில் காண வேண்டுமென்று ஆசை, மதுராந்தகத்தில் காண வேண்டுமென்று ஆசை. ஆசை, ஆசை கொள்ளை ஆசை! ஆனால் செம்மொழி மாநாடு, தமிழ் மரபு அறக்கட்டளை வேலைகள் என் நேரத்தை முழுமையாய் அபகரித்துவிட்டன. இந்தக் கையறு நிலையில், என் மாயை என்னைக் கட்டிப் போட்டாலும் அம்மாயையைக் கிழித்துக் கொண்டு அவன் அருளாசி வருவது எவ்வளவு சிறப்பு? சென்னை வாழ்வில்,’சாமியாவது, பூதமாவது’ என்று வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. இத்தனை அவசரத்திலும், அவன் பல்லக்கு வைத்துக் கொண்டு நம்மைக் காண வருகிறான் என்பதுதான் சிறப்பு.

எப்படி வருகிறான்? நான் மதுரைவாசி. எங்களுக்கு உற்ற துணை திருமால் இரும் சோலை அப்பன். அவனோ கள்ளழகன். அக்காட்சியில் காலம் கழித்தவர்கள். எனவே சென்னையில் வந்து காட்சி கொடுக்கும் போதும் அவன் பார்த்தசாரதியாக வராமல் கையில் சாட்டையுடன் குதிரை மீதேறி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போல் வருகிறான். அது அவன்தானா? என்று சந்தேகம் வருமானால், குதிரைக்கடியில் ‘கருப்பணசாமி’ (விஷ்ணு பூதம்)கையில் அரிவாளுடன் நிற்கிறார். பிறகென்ன சந்தேகம்? நமக்கு எங்கே சந்தேகம் போகிறது? அக்காவைப் பார்த்து உலவளாவிய பின்னும் அவர் விடுவதாயில்லை. வாசலில் புறப்பாடு என்று வந்து நின்றோம்.

அன்று ஏதோ ஊசலாம். திருமங்கை ஆழ்வார் பெரிய திருடனாம். வழியில் போகும் பெருமாளிடம் எல்லாவற்றையும் கொள்ளையிடுவதாக நாடகம். பெருமாள் துரத்த, திருமங்கை ஓட. பெருமாள் கொஞ்சம் இளைப்பாறும் போது பட்டியியல் இடுகிறார்கள். என்னென்ன திருடிக்கொண்டு போயிருக்கிறாரென்று. உண்மையில் அங்கு பெரிய கள்வன் பெருமாள்தான். ஏனெனில் கன்னம் போடுபவனின் உள்ளதைக் கவர வந்துள்ள கள்வன் இவர்தான். அதுதான் கடைசியில் நடக்கிறது. இது அசடு, கலியன்! எல்லாம் திருடிவிட்டதாய் எண்ணிக்கொண்டு கடைசியில் பார்த்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. கோஷ்டி பலமாக வாடினேன், வாடி வதங்கினேன்!! என்று சாற்றுகிறது. அதுதானே உண்மை. துயர் இடும் பெரும் பையில் விழுந்தவுடனே நம் வாடுதல் ஆரம்பித்துவிடவில்லையோ? இப்படியெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் வந்தார் ஒரு பாகவதர். நம் திருமலை விஞ்சாமூர் வேங்கடேசன் எனும் மின்தமிழ் அன்பர். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஏதேட்சையாக அவரும் சொன்னார், ‘உம்மைப் பார்க்க பெருமாள் வந்திருக்கார் ஓய்!’ என்று.

இவையெல்லாம் சம்பிரதாயமாகச் சொல்லும் வார்த்தை என்றுதான் இதுவரை எண்ணிவந்தேன். ஆனால் அருளாட்சியின் பூடக உலகில் இம்மாதிரி நிகழ்வுகளை சம்பிரதாயமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மிகவும் துல்லியமான தனிச்சேதி என்றே கொள்கின்றனர். இதை விளக்க ஸ்ரீரங்கம் முரளி பட்டரின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்று. அவரிடம் யாரோ அங்கிருக்கும் சில சம்பிரதாயங்களை விளக்கக் கேட்க இவரும் ஒரு புதுப்பொருள் சொல்ல, பின்னால் அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. தாம் சொன்னது சரியா? தவறா? என்று. அங்கு வந்த கிருஷ்ணப்பிரேமி ஸ்வாமிகளிடம் அவர் கேட்க, ஸ்வாமிகள் நீ எங்கிருந்து இதைச் சொன்னாய்? என்று கேட்டிருக்கிறார். சந்நிதியில் என்றிருக்கிறார் முரளி பட்டர். பின் என்ன சந்தேகம்? பேசியது நீ அல்ல, அவன் என்று விளக்கியிருக்கிறார். ஸ்ரீரங்க வரலாற்றில் இப்படி அர்ச்சகர் மூலமாக அவனிட்ட கட்டளைகள்தான் எத்தனை? அவன் நம்முடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் நமக்குத்தான் ‘அவன்’ பேசுகிறான் என்று புரிவதில்லை.

அர்ச்சகர் என்றவுடன் இன்னொரு சம்பவம். என் பெண் ஸ்வேதாவிற்கு ஆண்டாள்தான், ‘கோயில் ஆழ்வான்’ என்று பாட்டி சொல்லிவிட்டார்கள். அவளுக்கு ஆண்டாள் மீது தனிப்பிரியம். பொதுவாகவே அவளுக்கு அம்பாள் கிருபை என்றும் உண்டு. அம்மூர்த்திகளே அவளைக் கவர்கின்றன. நியூயார்க்கில் (பிள்ளையார் கோயில்) நான் கிருஷ்ணன் அழகில் லயித்திருக்க இது சரஸ்வதி சந்நிதிமுன் அழுது கொண்டு நிற்கிறது! அப்படித்தான் அவள் ஸ்ரீரங்கம் ஆண்டாள் சந்நிதிக்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து ஆழி மழைக் கண்ணீர் விடத்தொடங்கிவிட்டாள். பாவம் அர்ச்சகர்! ஏதோ குழந்தைக்கு சோகமென்று விசாரித்து இருக்கிறார். இவளுக்கென்ன சோகம்? ஆண்டாளின் அருளாட்சியின் மழையில் நனையும் போது கண்கள் தானாக தாரை வார்க்கின்றன. துன்பம் மட்டும் கண்ணீர் வரவழைப்பதில்லை ஆனந்தமும் கண்ணீரைத்தான் வரவழைக்கிறது என்று அவருக்கு இவளால் புரிய வைக்க முடியவில்லை.

இப்படி ஆனந்த பாஷ்பம் செய்வது அடியார் பழக்கம். இதுவொரு பாகவத பாவம்

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி
நாணிக் கவிழ்ந்திருப்பன்,
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்.
செந்தா மரைக்கண்ணா,
தொழுவன் னேனை யுன்தாள் சேரும்
வகையே சூழ்கண்டாய். 5.8.5


இப்படி தசபாவங்களுண்டு என்று பாகவதமும் சொல்கிறது.

செம்மொழி மாநாட்டில் நண்பர் அண்ணா கண்ணன் தன் அன்னையை அறிமுகப்படுத்தினார். ஆழ்வார்கள் மீதான என் காதலை அவரிடம் சொன்னார். நானும் குலசேகர ஆழ்வாரின்

வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே 5.4


எனும் பாடலைப் பற்றிச் சொல்ல அவர் கண்கள் பனித்தன.பின்னொரு சமயம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் திருவேங்கடமணியுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அவரது தாயார்,

கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!


என்று சொல்லி கண்ணீர் உகப்பர் என்று சொன்னார். அது என்ன? ஒன்று சொன்னார் போல், வைணவர்களுக்கு அடியார் பெயர் சொன்னால், ஆண்டவன் பெயர் சொன்னால் பொல, பொலவென்று கண்ணீர் வந்துவிடுகிறது? இப்படியானதொரு மனப்பக்குவத்தை எப்படி நம் பெரியோர் தமிழரிடம் உண்டாக்கினர்? அதுவும் செந்தரமாக்கப்பட்ட செவ்வியல் பதிப்பு போல் சாதி வேறுபாடு இல்லாமல், வைஷ்ணவனுக்கோர் லட்சணம் இது என்பது போல். புதுவையில் கி.ராவுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது வேடிக்கையாகச் சொன்னார், ‘இவனுகளுக்கு ரொம்ப அகந்தை ஓய்! தானொரு வைஷ்ணவனென்று! அது போகாதவரை உங்களுக்கு வைகுந்தம் இல்லை! என்று நான் சொல்வதுண்டு’ என்றார். அப்பேச்சின் ஊடாக வெளிப்படுவதும் இந்தக் கர்வமே! அதுவொரு தேவையான திமிர் போல்தான் எனக்கென்னமோ படுகிறது! திருவல்லிக்கேணியில் தெற்கு ரத வீதியில் நடந்த பெருமாள் புறப்பாடும், பெருமாளைத் தூக்கித் திணவெடுத்த வைணவர்களின் தோள் புடைப்பும், இடைவேளையில் கம்பத்திற்குக் கம்பம் ஓடி விளையாடும் சிறார்களின்ன் குதூகலமும், நடு இரவைத்தொட்டு விட்டது என்பது கூட மறந்த நிலையில் அங்கிருந்த ஆனந்தமும், இன்று இப்போது கொரியாவிலிருந்து எண்ணும்போது ஏதோ இன்பக்கனா போல் தோன்றுகிறது. பூகோள வைகுந்தம் என்பது என்னவென்று அன்று ஸ்ரீரங்கத்தில் உணர்ந்தேன். பிறிதொரு சமயம் திருவல்லிக்கேணியில் உணர்ந்தேன். ஏசு பேசுகின்ற அருளாட்சி இதுதான் என்று திரும்பச் சொல்ல வேண்டுமோ?

பாகம் 2: 006 பக்தவத்சலம் அச்சுதம்!

பிறந்தால் கலி காலத்தில் பிறக்கவேண்டும்!

என்ன மாற்றி சொல்லிவிட்டேன் என்று சந்தேகமா? இல்லை நிச்சயமாக, கலிதான் மிக புண்ணிய யுகம். இந்த யுகத்தில் பிறந்த நாம் பாக்யசாலிகள்! ஏனப்படி? நம்மாழ்வாரைக் கேட்போம். கலியில் என்ன விசேஷமென்று!!

பொலிக பொலிக பொலிக!
போயிற்று வல் உயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு
இங்கு யாது ஒன்றும் இல்லை,
கலியும் கெடும் கண்டு கொண்மின்!
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்து இசை பாடி ஆடி
உழிதரக் கண்டோ ம். 5.2.1

சர்வ நிச்சயமாகச் சொல்லிவிட்டார் சடகோபன். இப்பாசுரத்தின் ஒவ்வொரு சொல்லும் உயிர் பெற்று வலம் வருவதை உணர்வுடையோர் உணர்ந்து உய்வர். முதலில் கலியில்தான் எண்ணிரந்த பாகவதர்கள் உலவுகின்றனர். கலியில்தான் எங்கும் நாம கீர்த்தனம். கலியில்தான் மின்வெளி இணையம். கலியில்தான் யூடுயூப் வீடியோ. கலியில்தான் உட்கார்ந்த இடத்திலிருந்து அதி உத்தமமான, அற்புதமான நிகழ்ச்சிகளை பைசா செலவில்லாமல் கண்டு களிக்க முடிகிறது. கலியில்தான் “கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல் மலியப் புகுந்து இசை பாடி, ஆடி உழிதரக்’காண்கிறோம்.

அத்தகையை உழிதரும் நிகழ்வுதான் விசாகா ஹரியின் பிரகலாத விஜயம் எனும் இந்த நிகழ்ச்சி!கையில் நிறைய நேரம் வைத்துக் கொண்டு ஒரு சுதந்திரமான மனநிலையில் பிரகலாதன் கதை கேட்க உட்காருங்கள். 18 பாகங்கள் கொண்ட இந்த இசை நாடகம் சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது!!

விசாகா ஹரியின் கதை மிக விசேஷமானது! ஏனெனில் தியாகராஜய்யரின் பாடல்களில் இவருக்கிருக்கும் பாடாந்தரம் மலைக்க வைக்கிறது. கதை சொல்லிக் கொண்டு வரும் போதே, ஒரு சொல்! அதை உரக்கச் சொல்லி, தியாகய்யரின் கீர்த்தனைகளின் இடையில் வரும் அச்சொல்லுடன் கீர்த்தனத்தை ஆரம்பித்து பின் முழுக்கீர்த்தனைக்கும் வரும் அழகு இருக்கிறதே! அடடா! இவ்வளவிற்கும் பரனூர் அண்ணா போலவோ, விசாகாவின் கணவர் ஹரிஜீ போலவோ இவர் ஹரிகதா குடும்பத்தில் பிறந்து சிக்ஷை பெற்றவர் அல்லர். ஹரி உபன்யாசம் பண்ணும் போது அப்படி கடல் மடை திறந்தார் போல் கொட்டுகிறது என்றால், அது ‘குலத்தொழில் கல்லாமல் பாகம்படும்’ எனும் சங்கப்பழமொழிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் விசாகா குழந்தை முதல் கிருஷ்ணப்பிரேமி அண்ணாவின் கதை கேட்டு வளர்ந்த ஒரு தேர்ந்த ரசிகை! கதை கேட்டுக் கேட்டு இவரும் ஒரு உபன்யாசர் ஆகிவிட்டார் என்பதுதான் ஆச்சர்யம்.ஒருவேளை அண்ணா அடிக்கடி சொல்வது போல் பகவத் விஷயம் சொல்வதற்கு ஆள் போதாது. இன்னும் நிறையப் பேர் வர வேண்டும்! என்பதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு இவர் களத்தில் புகுந்தாரோ என்னவோ! ஆனால் பகவத் விஷய விநியோகம் என்பதை நூதனமாகச் செய்கிறார் என்பது உண்மை.பரனூர் பெரியவருக்கும், ஹரிஜிக்கும் நம் விசாகா ஹரிக்கும் ஒரு பெரிய வித்யாசமுண்டு. அது என்னவெனில் விசாகாவினுடையது ஒரு இசை நாடகம். அவரின் தேனினும் இனிய குரலில் மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள், மீரா பஜன், நாலாயிர திவ்யப்பிரபந்தம், பிரேமிகாகீதம், பாரதி பாடல்கள் என்று கேட்டு ஆனந்திப்பது ஒரு தனி அனுபவம். இசைக்கு நம்மை மேல் நிலைக்கு இட்டுச் செல்லும் சக்தியுண்டு. பக்தியுடன் பாடும் பாடல்கள் கல் நெஞ்சரையும் உருக்க வல்லது. கீழ்படிகளில் இருக்கும் நமது சக்கர நிலையை மேற்படிகளுக்கு இட்டுச் செல்லும் உந்துதல் இசைக்கு உண்டு. இசை உணர்வின் ஊடாகப் பாயும் அமுதம். இறைவனைப் பற்றிப் பேசும் திருமங்கையாழ்வார், ‘உணர்வெனும் பெரும்பதம்’ என்கிறார். உணர்வு உள்ளவன்தான் மனிதன். அந்த உணர்வின் வழியைச் சுத்தம் செய்து தெய்வீக அனுபவம் அதில் மண்டச்செய்ய வல்லது இசை. இந்த அரிய வழிமுறைக் கையாண்டு நம்மை உய்விக்கப் பிறந்திருப்பவர் விசாகா!!

நாமும் குழந்தையிலிருந்து கீர்த்தனங்கள் கேட்டு வருகிறோம். ஆனால் எந்தக் கீர்த்தனம் எச்சூழலில் எப்படி பாடப்பட்டது என்று நாம் அறிவதில்லை. மேலும் எல்லாப் பாடகர்களும் பக்தி சிரத்தையோடு பாடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில பேர் வெறும் வித்வத்துவத்தைக் காட்ட நீட்டி முழக்கி பாடும் போது வெறும் இசை நுணுக்கம் மனதில் நிற்குமே தவிர அப்பாடல் தர வேண்டிய உணர்வெனும் பெரும் பக்தி வந்து சேராமல் போய்விட வாய்ப்புள்ளது. ஆனால், இந்திய சநாதன தர்மத்தில் அத்தனை சாதனைகளும் ஒரு திக்கு நோக்கியே பாய வேண்டும் என்பது விதி. ‘யாழின் இசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!’ என்பது திருவாய்மொழி. நம் செவி இருப்பதின் பயன் நாரண கீதம் கேட்பதுதான், வாய் இருப்பதின் பயன் நாரண நாமம் சொல்வதுதான், கண் இருப்பதின் பயன் நாரண ஸ்வரூபத்தை உள்வாங்குவதுதான், அறிவு இருப்பதின் பயன் ஹரி எனும் பேருண்மையை அறிந்து கொள்ளுதல்தான். இப்படி, இப்பிறவியின் பயனே ஹரிகதை கேட்டு அவர் பாதார விந்தங்களில் சரண் புகுவதுதான். அப்படி இருக்கும் போது விசாகாவின் ஒவ்வொரு நிகழ்வும் மிக எளிதாக நம்மை இத்திக்கு நோக்கி இட்டுச் செல்வது நாம் செய்த பாக்யம் இல்லையா? இதைச் சொல்லும் போதே விசாகா ஹரி எடுத்துக் கொள்ளும் ஆர்வம், சுயமுனைப்பு, கடும் உழைப்பு இவை நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. மூன்று மணி நேரம் உபன்யாசம் செய்வதே கஷ்ட. ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச மாட்டார். பாவம் விசாகா, ஒரு வாய் நீர் கூட அருந்தாமல் கதையும், தெள்ளிய குரலில் பாடவும் செய்வது வியப்பை அதிகரிக்கிறது. ஏனெனில் சும்மா வருடம் ஒருமுறை சீசனில் பாடுபவர் கூட தம் குரல் கெட்டுவிடும் என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பர். அதிகம் பேசினால் தொண்டை வரண்டு சாரீரம் கெட்டுவிடும் என்பதொரு வழக்கு. ஆனால் விசாகா, அதையெல்லாம் பொருட்படுத்தாது, கதையும், சங்கீர்த்தனமும் செய்வது பரோபகாரம். நிச்சயமாக அண்ணாவின் பரிபூரண ஆசி கிட்டியிருப்பது தெரிகிறது. சில நேரம் தோன்றும், பாவம் குழந்தை! இப்படி நா வறண்டு போகும் படி கதை சொல்கிறதே! உடையவருக்கு வடுக நம்பி கிடைத்தது போல் இவருக்கு யாராவது ஒருவர் கிடைத்து அவ்வப்போது இவரைக் கவனித்துக் கொண்டால் எப்படியிருக்கும்? என்று தோன்றுகிறது.

இதில் இன்னொரு உண்மை இருப்பதையும் அறியலாம்.எனக்கு கதை கேட்க நேரமில்லை என்று சொல்லி அவசரப்படுபவர் எதை இழக்கிறார் என்று தெரிந்து கொள்ளவில்லை. கதை ஏன் நம்மை ஈர்க்கிறது. நமது பரிணாமமே கதை கேட்டு உய்வுற்ற பரிணாமம். கல்வி, கேள்விகள்தான் நம்மை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. மேலும் இறைவன் எனும் பூரணத்துவத்தைப் பற்றி நாம் கேட்கக் கேட்க அந்த உயர்ந்த குணங்கள் மெல்ல, மெல்ல நம்மில் படிகின்றன. எத்தனையோ கதைகள் இருக்க, ஹரிகதா என்பதை மட்டும் சிறப்பாக எடுத்து இந்திய மரபு வளர்த்தெடுத்து இருப்பது ஏன்? ஏனெனில், மும்மூர்த்திகளில் ஒருவராகவும், அவர்களுக்கு மேலாலானவராகவும் உள்ள நாரணன் சாத்வ குண பரிபாலனம். சத்வ உணவு, சத்வ நடத்தை, சத்வ அறிவு இதுவே நாம் அடைய வேண்டிய உயர் நிலை. ‘எங்கும் உளன் கண்ணன்’ எனும் உயர் அறிவு வாய்த்திட வேண்டும். ‘உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்’ என்று கண்ணீர் விட வேண்டும். அதுவே சாத்வீக குணம். அதுவே உயர் அறிவு. இதை எட்ட வேண்டுமெனில் நாம் ஹரிகதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அயர்வில்லாமல்.

தியாகய்யர் மூன்று நாடகங்கள் செய்திருக்கிறாராம். அதில் இரண்டுதான் இப்போது கிடைத்திருக்கின்றன. 300 ஆண்டுகளுக்குள் நாம் இதைத் தொலைத்திருக்கிறோம் எனும் போது நமது அஜாக்ரதையை என்ன சொல்லித் திட்டுவது? கிடைத்திருக்கும் இரண்டு நாடகங்களிலும் முத்து, முத்தான கீர்த்தனங்கள். ஒவ்வொன்றாய் விசாகா எடுத்துக்காட்டும் போது மெய்சிலிர்க்கிறது! அடடா! இந்தக் கீர்த்தனை இந்தச் சூழலில் இன்ன அர்த்தத்தில் பாடப்பெற்றதா? அடடா! இப்படித்தான் ஆக்கியோன் அனுபவித்து இருப்பானோ? என்று நம்மைக் காலம், வெளியை உடைத்து வேறொரு அனுபவ உலகிற்கு இட்டுச் செல்லும் வல்லமை விசாகா ஹரியின் இசை நாடகத்திற்கு இருக்கிறது.

குழந்தை போன்ற முகம். கண்ணைக் கண்ணை உருட்டிக் கொண்டு குழி விழ இவர் சொல்லும் கதை யாரைத்தான் மயக்காது?பிரகலாத பக்த விஜயம் ஏன் கேட்க வேண்டும்? கேட்ட கதைதானே? அப்படி எண்ணக்கூடாது. சொல்லுபவர் சொல்லின் சொல்லாத பொருள் எல்லாம் சொலபத்தில் புலப்படும்! பிரகலாதன் தீனன். குழந்தை. பெரிய பராக்கிரமன் அல்லன். இவனுக்கு அருள் செய்ய ஒரு அவதாரம் என்றால் அது நாரணன் தீன தயாளன் என்பதைக் காட்டுகிறது.

பிரகலாதன் அசுரன். நீச்ச குலத்தில் பிறந்தவன். ஆனால் இறைவன் குலம் பார்த்தா அருள் செய்கிறான்? இல்லையே! ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது அவன் வாக்கன்றோ!

பிரகலாதன் அறிவுஜீவியல்ல. கற்றல் என்பது நடப்பதற்கு முன் உள்ள பள்ளிப் பாலகன். எனவே அவன் ஞானத்திற்கு மயங்கி இறைவன் வரவில்லை. அவன் எளிமை கருதி வருகிறான்.

இப்படி பிரகலாதன் எனும் உருவகம் எதைச் சுட்டுகிறது என்று மேலும், மேலும் ஆராயப்புகின், அந்த உருவகம் வேறு யாரையும் சுட்டவில்லை, அது நம்மைத்தான் சுட்டுகிறது என்று புரியும். நமக்கு என்ன அறிவு இருக்கிறது என்று பீற்றிக் கொள்ளமுடியும்? நமக்கு என்ன பராக்கிரமம் இருக்கிறது என்று மார் தட்ட முடியும்? அட! நமக்கு என்னதான் பெரிய குலம் இருக்கிறதென்று பறை சாற்ற முடியும்? ஒன்றும் கிடையாது. ஆயினும் தாய் முகம் பார்த்து ஏங்கும் குழந்தை போல், ஒரு பாலகனாக நாம் சக்தியற்று, திறனற்று, வலுவற்று நிற்கும் நிலையை பிரகாலத சரிதம் நம் முன் காட்டுகிறது.

ஆனால் பிரகலாதனுக்கு எவ்வளவு பெரிய பேறு கிட்டியது? பாகவ சக்ரவர்த்தி என்ற பட்டம், படைத்தவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது!! பிரகலாத சரிதம் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இதனால்தான் இச்சரிதம் இத்தனை நூற்றாண்டுகளாக பல்வேறு ஞானிகளால், இசைக்கலைஞர்களால், பௌராணிகர்களால் மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது!அந்தப்பெரிய பொக்கிஷத்தை சரளமாகக் கையாண்டு நமக்கு நம்பிக்கை தர வந்திருக்கும் இசை நட்சத்திரம் விசாகா ஹரி. நம்மாழ்வார் பாடிய ‘பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்! என்பதுதான் எவ்வளவு உண்மை!

எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 2.8.9