e-mozi

தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 5


கட்டளை 5

எப்போதும் பிரயோஜனத்தையே குறியாகக் கொண்டு தொழும் நீவீர் அதைவிடுத்து அண்டத்திற்கே அதிபதியான இறைவனது பல்லாயிரம் நாமம் சொல்லி வாழ்த்தி புதிய வாழ்வு பெறுவீர்!

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே.அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களை தன் ஆளுமைக்குள் வைத்திருக்கும் அதிபதியை, தீமைகளனைத்தையும் (உம். அரசுர், இராக்கதரரைக் களைதல்) நீக்குகின்ற இருடீகேசனை ஆயிரம் நாமங்கள் சொல்லித்தொழும் தொண்டர் குலத்திடை சேர்ந்து வாழ்வு  பெறுவீர். இதற்கான உத்தம தகுதி இதுவரை காரியம் ஒன்றையேக் குறியாகக் கொண்டு வாழ்ந்த வாழ்வைப் புறம் தள்ளுதல் ஆகும்!

சிறப்புரை:

பல்லோரை அழைக்கும் பட்டர்பிரான் இப்பாசுரத்தால் இரண்டுவகையான மக்களை அழைக்கிறார். ஒருவர் தம் சொத்தைப் பறிகொடுத்து எமக்கு அதை மீட்டுத்தர மாட்டீரா? எனத்தொழும் கோஷ்டி. இதில் மற்ற தெய்வங்களை நம்பி உள்ளதையும் இழந்தோர், இராக்கர் போன்றோரிடம் சொத்து, பத்துக்களை இழந்தோர் என்போர் அடங்குவர். மற்றொரு கோஷ்டி, அண்டத்தையே ஆளும் அன்பரே! உமது போக்யத்தில் கொஞ்சமேனும் எமக்குக்கொட்த்து எம்மை சௌகர்யமாய் வைத்திருக்க மாட்டீரா? என சதா பொருள் வேண்டும் கோஷ்டியினர். இப்படி பிரயோஜனத்தையே நாடும் குலம் விட்டு, ஆயிரம் நாமங்கள் கொண்ட இருடீகேசனை வாழ்த்துவது ஒன்றிலேயே அனைத்து இன்பங்களையும் காணும் தொண்டர் குலத்தில் சேர்ந்து உய்வு பெருங்கள்! என்பதோர் கட்டளை!

தென் தமிழின் பத்துக்கட்டளைகள் - 4


கட்டளை 4

இறைவன் இவன்தான் (இப்படிப்பட்டவன்) எனும் சுய வரம்புகளை ஒழித்து உண்மையான இறைஅனுபவம் கூட அடியார்களோடு சேருங்கள்!

ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.ஸ்ரீவைஷ்ணவம் இப்பாடலுக்கு விரிவாக அதன் மொழியில் பொருள் சொல்கிறது. அதற்கு முன் எளிமையான பொருளென இப்படிக்கொள்ளலாம். உடல் மண்ணில் சரிவதற்கு முன்னம் இறைவனை ஏற்றித்தொழும் அடியார் கூட்டத்தில் சேர்ந்து, அதற்கு முன்னர் ”இறைவன் இப்படிப்பட்டவன்” என்று நாம் கொண்ட முன்வரைவுகளை முற்றுமாய் ஒழித்து, நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணா! என்று பல்லாண்டு கூறுக! என்பதோர் கட்டளை.

இறைவனைப்பற்றி பல்வேறு கருத்தாங்கள் உள்ளன. அவை மதி விகல்பத்தால் வருவதாக திருவாய்மொழி சொல்கிறது. இருப்பவன் ஒருவன் தான். அவனை நன்கறிய வேண்டுமெனில், இதற்கு முன்னம் நாம் கொண்ட கருத்தாக்கங்களிலிருந்து விடுபட்டு, அதை முற்றுமாக ஒழித்து, நல்ல அடியார்களுடன் சேர்ந்து பரம்பொருளை நன்கு அறிந்து கொள்ளுங்கள் என்பது பட்டர்பிரான் வேண்டுகோள். அவர் பரம்பொருள் நிர்த்தாரணம் செய்தவர் எனவே அவர் இப்படிக் கூவி அழைப்பது சாலப்பொருந்தும்.

ஆனால் விசேஷப்பொருளாக ஸ்ரீவைஷ்ணவர்கள் சொல்வது துறை சேர்ந்தோருக்கு உவப்பாக இருக்கலாம். அதாவது, நமக்கு இருவகையான உடல்கள் உள்ளன. பஞ்சபூதங்களின் (ஸூக்ஷ்ம அவஸ்தைகளாகிய) தந்மாத்ரைகள் ஐந்தும் கருமேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மநஸ்ஸு (மனது) ஒன்றும் ஆகிய பதினாறு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸூக்ஷ்ம (சூட்சும) சரீரமெனப்படும்; தந்மாத்ரைகளின் ஸ்தூலங்களான பூதங்களூடன் சேர்ந்து அவற்றோடு பஞ்சவிஷயங்களும், ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் - ஆகிய இருபத்தினான்கு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸ்தூலசரீரமெனப்படும்.  (matter & antimatter போல).

உயிர் உடலை விட்டு நீங்கிய பின் சூட்சும சரீரம் கொண்டு இறைவனை அடைய முயல்கிறது. அதுசமயம், ஆன்மநுபூதியை மட்டுமே குறிக்கோளாக கொண்டோர் வாழும் ’கைவல்யம்’ எனும் முக்தி நிலையை வேண்டுவோர் அங்கு சென்று விடுவார்களெனில் மீண்டு வரவியலாது என்பதை மனதில் கொண்டு, ஏடு கைவல்ய நிலத்தில் இடும் முன்னர், பரமபதம் எனும் உலகிற்கு அடியார்களோடு வந்து சேர்ந்து வைகுந்த அநுபூதியை அடையுங்கள் என்று வேண்டுவதாக விசேஷப்பொருள் சொல்கின்றனர்.

கைவல்யம் எனும் தனிமையைத்தவிர்த்து, ‘குள்ளக்குளிர குடைந்து நீராடு’ என்று சொல்கிறார்படி அடியார்களோடு இருந்து இறைவனை வாழ்த்தி அனுபவியுங்கள். அது இகலோகமாக இருந்தாலும், பரலோகமாக இருந்தாலும் கூடி இருத்தலே கோடி நன்மை என்பது வைணவ வழி என்று புரிந்து கொள்ளலாம்.

தென் தமிழின் பத்துக்கட்டளைகள் - 3


கட்டளை 3

கூழுக்கு ஆசைப்பட்டு கோயிலுக்குப் போவதற்குப்பதில் கும்பிடும் தெய்வத்தின் தன்மையறியச் செல்வீர்!

வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமேஅமிழ்தமே என்றாலும் விருந்து புறத்து உண்ணுதல் தவறு எனும் வழக்குப்படி (விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று - குறள்) பெரியாழ்வார் எல்லோரையும் இறை அனுபவத்திற்கு அழைக்கிறார். வந்து சேர்ந்தவர்களில் பலவகை மாந்தரைக் காண்கிறார் பட்டர்பிரான். ஒரு சிலர் இறைவனை மட்டுமே கருத்தில் கொண்டு வந்து நிற்கின்றனர். சிலர் இறைவன் துணையால் கைவல்யம் எனும் தனி உலகு கண்டு தளையற்று இருக்க ஆசைப்படுகின்றனர். ஒரு சிலரோ கோயிலுக்குப் போனால் பிரசாதம் கிடைக்கும். புளியோதரையும், தயிர்சாதமும், வெண்பொங்கலும் அந்தக் கோயில் மடப்பள்ளியில் தயாராவது போல் எங்கும் கிட்டாது என்று வருகின்றனர். ஆனால், இப்படி கூழாட்பட்டு வருகின்ற ஜனங்களை ஒதுக்கிவிடுகிறார் பெரியாழ்வார். ஏன் சாப்பிடுதல் இனிமை இல்லையா? என்றால். ஆம் உண்ணுதல் இனிமை, பருகுதல் இனிமை, போகம் இனிமை. ஆனால் இத்தனையும் செய்விப்பவன் இறைவன் என்ற இறையுணர்வு முக்கியம். நம்மால் தனித்து ஒன்றும் செய்யவியலாது. வயிற்றுப்போக்கு என்றால் சாப்பிடமுடியாது. வாய்ப்புண் என்றாலும் அதுவே. வலுப்பு, வாதம் என்றால் போகிக்கமுடியாது. எனவே எல்லாவற்றிலும் உள்நின்று இயக்குபவன் இறைவன் என்ற உணர்வோடு கோயிலுக்கு வர வேண்டும் என்கிறார் பட்டர். பின்னொரு பாடலில், கால் முடமாகிவிட்டால் கோயிலுக்குப் போகமுடியாது. வாய் கோணி விட்டால் இறைவனைத் தோத்திரம் கூறித்தொழ முடியாது எனவே உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே கோயிலுக்கு செல்லும் வழக்கத்தைக் கொள்வீர் என்றும் சொல்வார் பட்டர்.

மேலும், இறைத்தொடர்பு என்பது இப்பாசுரத்தை வாசித்த பின்னா வருகிறது? கோடான கோடி காலமாக, என்று உயிர்த்தோற்றமுற்றதோ அப்போதே தொடங்கிவிடுகிறது இல்லையா? எனவே இது புது உறவு அன்று. காலம், காலமாகத்தொடரும் உறவு. அதையும் மனதில் கொண்டு கோஷ்டி சேருங்கள் என்கிறார்.

“மண்ணும் மணமும் கொண்மின்” என்பது வழக்கொழிந்து போன ஒரு தமிழ் மரபு. முற்காலத்தில் அடிமை யோலை யெழுதும்போது ”மண்ணுக்கும் மணத்துக்கும் உரியேனாகக் கடவேன்” என்றெழுதுவது வழக்கமாம். அதன் படியே, இறைத்தொண்டு ஒன்றே குறியாக, ‘பரமனுக்கு அடிமை’ எனும் மனோபாவத்துடன் வாழ்த்தல் சிறப்பு என்றும் தம் கட்டளையில் எழுதுகிறார் பட்டர்பிரான்.

தென் தமிழின் 10 கட்டளைகள் - 2


கட்டளை 2


ஒத்த இறையுணர்வு கொண்ட அடியவருடன் இறைவனை ஏத்தல் நலம்.


அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

பாடல் கேட்க!

ஒரு கச்சேரிக்குப் போகிறோமெனில் நல்ல ரசிகர் உடன் இருந்தால் இசையை ரசிப்பது மட்டுமன்று, இசையின் நுணுக்களையும் நன்கு அறிந்து அனுபவிக்கலாம். கம்பனை ரசிக்க வேண்டுமெனில், ‘ரசிகமணி’ டி.கே.சி யோடு இருக்க வேண்டும் என்பார் கி.இராஜநாராயணன். அப்போதுதான் கம்பனின் கவித்துவம், அவனது அழகியல், பக்தி எல்லாம் மிளிருமாம். கொரியாவில் கவிதை வாசித்து அனுபவிக்க வேண்டுமென ஜென் பௌத்த பிட்சுக்கள் மலையின் ஓர் பகுதியில் அழகிய தேனீர் குடிலொன்றை இன்றைக்கு 500-600 ஆண்டுகளுக்கு முன் அமைத்து கவிதானுபவம் பெற்றார்கள். அதே போல்தான் இறை அனுபவம் என்பதும். இறைவன் என்பவன் கல்யாண குணங்கள் அனைத்தும் உடையவனாய் இருக்கின்றான். அதை நாம் சேர்ந்து அநுபவிக்க ஒரு வாழ்நாள் போதுமோ? ஸ்ரீரங்கத்து வீதிகளில் இப்படி அடியார்கள் கோஷ்டி, கோஷ்டியாக இருந்து பாகவத, பக்தி அனுபவத்தில் இருக்கும் போது இறைவன் திருவுலா கொள்கிறான். இறை அனுபவத்திற்கு இறைவனே இடையூறு செய்வதால் ‘நம்பெருமாளுக்கு’ “கோஷ்டி கலைப்பான்” என்ற பட்டப்பெயருண்டு. வெண்ணெய் திருடி கோபியரிடம் மாட்டிக்கொண்ட கோவிந்தனுக்கு கலியிலும் நல்ல பெயர் கிடைக்காது போலும்!!

நாம் முன்பே கண்டோம், இறைவனை ஏத்துதல் ஒரு வகையில் நம்மையே நன்றாக இரு! என வாழ்த்திக்கொள்வதாக அமைகிறது என்று. இங்கும், “அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு” என்று தம்மையும் மங்களாசாசனம் செய்து கொள்கிறார் பெரியாழ்வார். இது தவறு இல்லையோ? எனக்கேட்டால், தவறு இல்லை என்கின்றனர் பெரியோர். ஏன்? என்று கேட்பதற்கு அழகான பதிலொன்று வருகிறது, “இத்தலை இருந்தாலன்றோ அத்தலைக்கு மங்களாசாசனம் செய்விப்பது!” என்று.

எனவே ஒத்த இறையுணர்வு கொண்ட அடியாரோடு இறைவனை ஏத்துதல் இன்பத்திலும் இன்பம். 

தென் தமிழின் பத்துக்கட்டளைகள் - 1


ஐயன்மீர்:

பெரியாழ்வாரின் பல்லாண்டு, பல்லாண்டு பாசுரங்களைக் கேட்டவுடன் எனக்கேனோ Decalogue அல்லது Ten Commandments நினைவிற்கு வந்தது. பெரியாழ்வார் தமிழ் இறைமையின் 10 கட்டளைகளை முன்வைக்கிறார். அவரது பல்லாண்டு, பல்லாண்டு எனும் 10 பாசுரங்களை ஏன் முதலில் சொல்ல வேண்டும் என்று வைத்தனர் என யோசித்தால் நான் சொல்ல வருவது புரியும். அதில் மிகத்தெளிவாக பாகவத இலட்சணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இறைமையை நோக்கிய நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பட்டயம் போட்டு எழுதி வைத்துவிட்டார் பட்டர்பிரான். 10 பாசுரங்களிலும் தெளிவாய் சில கட்டளைகள் / அணுகுமுறை சொல்லப்படுகிறது.

Disclaimer: ஒரு பேச்சுக்கு பத்துக்கட்டளை என்பதால் வரிக்கு வரி யூத, கிறிஸ்தவ பத்துக்கட்டளைகளுடன் ஒப்பு நோக்க வேண்டாம் ;-)


இறைவன் ஒருவன், அவனைப் பல்வேறு பெயர் சொல்லி, பல்வேறு வகைகளில் வழிபடுகிறோம் என்பதைத் தமிழ் அருளாளர்கள் மிகத்தெளிவாகச் செப்பியுள்ளனர்.

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக் கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.

எனவே இங்கு நான் சொல்லப்போவதை நம் தமிழ் மரபின் குரல் என்று காணுமாறு வேண்டுகிறேன். உங்கள் பின்னூட்டங்கள் நம் மரபுப்புரிதலை வளர்த்தெடுக்கும். நன்றி.தென் தமிழின் பத்துக்கட்டளைகள்

கட்டளை 1.

இறைவன் தாயும் தந்தையுமற்ற தனிப்பொருள். வேரும், வித்துமற்ற தொன்மரம். இறைவன் நம்மைக் காக்கின்றான் என்பது 
பொதுப்புரிதல் என்றாலும் தாயும், தந்தையுமற்ற இறைவனைக் காக்க நாம் ‘காப்பு, காப்பு’ என்று தூய்மையுடன் எண்ணுதல் 
வேண்டும். 


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

இறைவனை நாம் காப்பதாவது? அவனுக்கு நாம் ‘காப்பு, காப்பு’ என்று சொல்வதாவது எனும் கேலிக்குரல் உள்ளே எழுவது
நியாயமானதே! இறைவழிபாடு என்பது அடிப்படையில் பா(b)வசுத்தி அளிப்பது. கல்ப கோடி காலங்களாக அவன் தன்னுள்ளே படைத்து, காத்து கெடுத்து உழன்று கொண்டு இருக்கிறான். நாம் கையில் ஒன்றுமில்லாமல் பிறக்கிறோம். எல்லாமுமாக அவன் உடன் இருந்து, ‘கல்லினுள் தேரைக்கும், கருப்பை’ உயிர்க்கும் உள்ளுயிராய், உறை பொருளாய் இருந்து வெளியே காற்று, நீர், மண்ணிலிருந்து உணவு இவைகளை நமக்களித்து இரட்சிக்கின்றான். அத்தகைய வள்ளலுக்கு நாம் செய்யக்கூடிய கைமாறு, ‘நீ! நல்லா இருப்பா!’ என்று வாழ்த்துவதே! இப்படி வாழ்த்துவது ஒரு வகையில் நம்மை நாமே வாழ்த்துவதாகும். ஏனெனில்,

யானும் நீயே என்னுள் உறைதலின்
எனதும் நீயேயுனதன்றியின்மையின்... (ஸ்வாமி வேதாந்த தேசிகன்)

என்று சொல்கின்றார்போல

நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை. (திருமழிசை ஆழ்வார்)

எனும்படிக்கு அவனை வாழ்த்துவது நம்மை நாமே வாழ்த்திக்கொள்வதாகவும் அமையும்.

மேலும், ‘தாயினுற்சிறந்த தயாபரனாக’ அவன் இருந்தாலும், அவனுக்குத் தாயாக நம்மை ஆக்கிக்கொண்டு அவனை வாழ்த்துவது ஒரு மிகச்சிறந்த தமிழ் மரபு என்பதை எண்ணுங்கால் உள்ளம் குளிர்கிறது.

நா.கண்ணன்