e-mozi

தென்தமிழின் பத்துக்கட்டளைப் பலன்கள்


பத்துக்கட்டளைப் பலன்கள்

இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் அநுசந்திக்க வேண்டியது!

பல்லாண் டென்று பவித்திரனைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

பலகோடி நூறு ஆயிரம் ஆண்டுகள் வாழ்க! வாழ்க என வாழ்த்தவேண்டுமெனில் வாழ்த்தப்படுபவர் அத்தனை சிறப்பிற்கும் உரியவராய் இருத்தல் வேண்டும். இவர் வாழ்த்துபவர் பரமபத நிலயன், நித்ய பரிசுத்தன். எதிரியைக்காட்டு! காட்டு என்று துள்ளும் சார்ங்கமெனும் வில்லை அடக்கி ஆள்பவன். வாழ்த்துகின்ற பெரியவரும் சாமான்யர் அல்லர். பெருமாளாலேயே, ‘பெரிய ஆழ்வார்’ என்ற பட்டத்தைப் பெற்றவர். ‘‘பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டோடி வந்து, என் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பி’’ என்று சொல்கிறார் போல ஸ்ரீயபதியை விட்டு ‘விட்டு சித்தர்’ மனதில் சதா குடிகொள்பவர் (அதனால் இவருக்கு விட்டு சித்தர் என்றாயிற்று). இப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்தில் வாழும் விட்டுசித்தர் மிக விரும்பிச்சொன்ன இப்பாசுரங்களை, ‘நமக்கு நல்ல காலம் பிறந்தது!’ என்ற மனமகிழ்வோடு பயில்வோர் என்றும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து என்றும் ‘பல்லாண்டு, பல்லாண்டு’ என வாழ்த்தும் நற்கதி அடைவர்.

பக்தி செய்வதற்குப்பலன் பக்தியே. தனியாக வேறுபலன் கிடையாது. என்னெனில் பக்தியில் எல்லாம் அடங்கிவிடுகிறது. அது போல் ‘பல்லாண்டு, பல்லாண்டு’ என வாழ்த்தும் இப்பாசுரங்களைப் பாடுவோருக்குப் பலன், என்றென்றும் பவித்ரனான ஸ்ரீமன் நாராயணனை, பரமேஷ்டியை ‘பல்லாண்டு! பல்லாண்டு’ என வாழ்த்தி மகிழும் வாய்ப்பும், அனுபவமும் கிடைக்கும் என்பதே!

வாழ்த்துவதற்கு வயதில்லை, ஆதலால் வணங்குகிறேன் என்றொரு வசனம் இப்போது மிகப்பிரபலமாக தமிழகத்தில் உள்ளது. அது எவ்வளவு அசட்டுத்தனம் என்பதை இப்பாசுரங்கள் செப்புகின்றன. உலகிலேயே மிக அதிக வயதுடையவர் இறைவன். ஏனெனில் அங்குதான் தொடக்கமே நடக்கிறது! அப்படியெனில் அவ்வளவு வயதானவரை நாம் ‘பல்லாண்டு, பல்லாண்டு’ என வாழ்த்தலாமோ? வாழ்த்தலாம், வாழ்த்த வேண்டும் என்கிறது தமிழ் மரபு. ஏன் வாழ்த்த வேண்டுமெனில்? நித்ய மங்களம் பூரணமாய் பெற்ற பவித்திரனை தினம் வாழ்த்துவதன் மூலம் மங்களம் நித்யமாய் இப்புவியில் தங்குகிறது! எங்கும் மங்களம் பொங்கி வழிந்தால் நல்லதுதானே!

//பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனாய் நித்ய பரிசுத்தனாய்ப் பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவனான ஸர்வேச்வரன் விஷயத்தில் பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் இவ்விபூதியில் எஞ்ஞான்றும் பாடுகிறவர்கள் மறுமையில் மோக்ஷலோகத்தை ய்டைந்து அங்கும் எம்பெருமானுடைய முகோல்லாஸத்தையே புருஷார்த்தமாக நினைத்து அனேக தேஹங்களை எடுத்துக்கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம் பண்ணப்பெறுவர்களென்று இதனால் பலன் சொல்லித் தலைகட்டிற்றாயிற்று.//

என்று ஸாதிக்கிறார் பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சார்யர். நித்ய சூரிகள் நிற்கும் பரம பதத்தில் வேண்டிய உடலெடுத்து, வேண்டிய வண்ணம் வாழலாம் என்பது பெரியோர் காட்சி. எனவேதான், ”அனேக தேஹங்களை எடுத்துக்கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம் பண்ணப்பெறுவர்களென்று” என்று வியாக்கியானம் அமைகிறது. இப்பாசுரங்களைப் பயில்வோருக்கு அத்தகைய பாக்யம் கிடைக்குமெனில் நிச்சயம் சொல்ல வேண்டியதுதானே!

பெரியாழ்வார் தமிழ் சிறப்பானது. அது எப்படி பண்டிதர்களுக்கு உவப்பாகிறதோ அதே அளவில் பாமரனுக்கும் உவப்பாகிறது. அவர் கிராமத்து வசனங்களை, வழக்குகளை நிறையப் பயில்வார். இங்கு கூடப்பாருங்கள், பல்லாண்டு பாடுவது எதற்கு என்றால் நல்லாண்டு கிடைத்தது என்று கொண்டாடுவதற்கு என்கிறார். நல்லாண்டு என்பது குடு, குடுப்பாண்டி வீட்டிற்கு வந்து, ‘நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது’ என்று அடிப்பானே! அது! பெரியாழ்வார் குடுகுடுப்பை அடிக்கிறாரா? இல்லை, இவரது கோஷ்டியில் சேர்ந்தவர் அடிக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் நூதனக் கோடாங்கி அடிக்கும் பாரதி போன்றோருக்கு பெரியாழ்வார் ஒரு inspiration ஆக இருக்க வாய்ப்புண்டு!

பத்துக்கட்டளைகள் நிறைகொள்கின்றன.

நன்றி: இப்பாசுரங்ளுக்கான விசேஷார்த்தங்கள், பிரதிவாதி பயங்கரம் அண்ணா அவர்களின் உரையிலிருந்து பெறப்பட்டன. நாலாயிரம் பாடல்களுக்கும் இப்பெரியவர் எளிய உரை எழுதியிருக்கிறார். அவை தற்சமயம் இணையத்தில் வாசிக்கக்கிடைக்கின்றன

பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சார்யர் அவர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சொடுக்குக


தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 11

தென்தமிழின் சமயக்கட்டளைகள்: 11

கட்டளை 11

அல்வழக்கொழித்த அடியார்தம் பெருமை சொல்லுதல் அரிதே!

அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே.
பத்துக்கட்டளைகள் என்று சொல்லிவிட்டு பதினோறாவது கட்டளையை எப்படி வைக்கலாம்? என்று கேட்கக்கூடாது. நாலாயிரம் (திவ்யப்பிரப்ந்தம்) என்று சொல்வது ஒரு round up figure தானே! திருப்பல்லாண்டு பாசுரங்கள் மொத்தம் 12. பதினோறாவது கட்டளையென்று முன் வைப்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் சாரமாக அமைகிறது. 


இது அல்வழக்கு ஒழித்த அடியார்தம் பெருமை அளவிடற்கரியது என்பது அது! அவ்வகை அடியார்தம் அடியாராக இருப்பதினாலே ஒருவன் மோக்ஷம் அடைகிறான் என்பது சாரம். அல்வழக்குகள் ஒழித்த அடியாரின் குணங்கள் என்னவென்று புரிந்து கொண்டால் ஸ்ரீவைஷ்ணவம் புரிந்துவிடும்!  அல்வழக்கொழித்த அடியார், தேகமே ஆன்மாவென்று எண்ணமாட்டார், இறைவனுக்கு ஆட்பட்டு இருக்க வேண்டிய ஆன்மாவை சுதந்திரமானது என்று எண்ணமாட்டார், தேவதாந்தரங்களைப் பரதெய்வமென்று நினைக்கமாட்டார், இறைவனிடத்தில் அல்ப பலன்களை வேண்டிக் கையேந்தார், மோட்சம் வேண்டுமென்று கருமம், ஞானம் போன்ற உபாயாந்திரங்களைக் கைக்கொள்ளார். 

இப்படியொருவரை மேற்கோள் காட்டுகிறார் பட்டர்பிரான். செல்வநம்பிகள் என்றொரு பெரியவர் திருக்கோட்டியூரில் வாழ்ந்திருக்கிறார். அவர் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்திருக்கிறார் [இதுதானோ பட்டர்பிரானை ‘திருக்கோட்டியூரே கோகுலம் என்று பாட வைத்தது?]. நாம் முன்பு செப்பியது போல், வாழைக்குலையில் ஒரு காய் பழுத்துவிட்டால் மற்றவையும் பழுத்துவிடும் என்று சொல்வதற்கிணங்க செல்வநம்பிகள் போன்ற பெரியோரின் சகவாசத்தால் ‘நானும்’ உனக்கு ஆதிசேஷன் போல் பழவடியேன் என்று ‘பரநிர்ணயம் செய்த’ பட்டர்பிரான் சொல்கிறார் என்பதுதான் இதன் சிறப்பு!. அடியார்களுக்கு நன்மை பயக்கும் தாரக மந்திரமான நமோ நாராயணா! எனும் நாமத்தை பல்வகையாலும் பரவச் சொல்லி, பவித்திரமான பரம் பொருளே உமக்கு பல்லாண்டு பாடுவோமே!

1. தேகம் ஆன்மாவன்று.

இதைப்புரிந்து கொள்வது எளிது. மண் கிடக்கிறது. மண்ணில், புல், பூண்டு முளைக்கின்றன. பயிர்களை உண்டு உயிர்கள் தழைக்கின்றன. உயிர்கள் சில காலம் வாழ்ந்த பின் மண்ணில் மடிகின்றன. மக்கி மண்ணோடு, மண்ணாகப் போகின்றன. மண்ணிலிருந்து மீண்டும் உயிர்கள் தழைக்கின்றன. இதுவொரு சுழற்சி. இப்படி இருக்கையில் தேகமே ஆன்மாவென்று எப்படி நம்புவது?

2. ஆன்மா சுதந்திரமானது அல்ல.

மண்ணிலிருந்து உயிர்கள் தழைக்கின்றன என்று கண்டோம். ‘சித்தினை, அசித்துடன் இணைத்தாய்! பரமா!’ என்கிறான் பாரதி. மண்ணுக்கு உயிருண்டோ? கிடையாது. ஆனால் எப்படி மண்ணிலிருந்து உயிர்கள் கிளம்புகின்றன? அசித்தான மண்ணுடனும், ஐம்பூதங்களுடனும் ‘சித்’த்தான உயிரை இணைக்கும் போது ‘யாக்கை’ உயிராக்கம் பெருகிறது. எனவே ஆன்மா சுதந்திரமானது அல்ல. அதன் சுழற்சியும் பரிபாலிக்கப்படுகிறது என்பது புரிகிறது.

3. தேவதாந்தரங்கள் பரதெய்வமன்று.

எத்தனையோ வகையான ஆன்மாக்கள் உள்ளது போல் எத்தனையோ வகையான தெய்வங்ளும் உள்ளன. எனவே, ஒன்று தெய்வமாக இருப்பதாலேயே அதுதான் ‘பரதெய்வம்’ என்று எண்ணுதல் கூடாது. பிரபஞ்சத்தில் காணும் தேவதாந்திரங்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து செயல்படுத்துவது ‘பரம்’. அப்பரம் யாது எனக் கண்டு தெளியவடைய வேண்டும்.

4. இறைவனிடத்தில் அல்ப பலன்களை வேண்டிக் கையேந்துதல் கூடாது.

மேலே சொன்ன மூன்றையும் புரிந்து கொண்டாலே, நான்காவது புரிந்துவிடும். எல்லாமே ஒரு சுழற்சியில், ஒரு நாயகனின் கைவண்ணத்தில் செயல்படும் போது நாம் நமக்கு, ‘இதைக்கொடு, அதைக்கொடு’ என்று கேட்பது அல்பமல்லவா? எனவே கோயிலில் போய் ‘பிச்சை’ எடுத்தல் கூடாது.

5. மோட்சம் வேண்டுமென்பதற்காக கருமம், ஞானம் போன்ற உபாயங்களைக் கைக்கொள்ளுதல் கூடாது.

”நெய்யிடை நல்லதோர் சோறும்” எனும் கட்டளையில் தெளிவாக விளக்குகிறார் எப்படி இறைவன் நமக்கு உண்ண உணவு, பருக நீர், வாழ வழிவகைகள் முன்னமே செய்து கொடுத்து அதன் மூலமாக தன்னிருப்பையும் அறிந்து கொள்ளும் புத்தி சாதுர்யத்தையும் கொடுத்துள்ளான் என்று. நாம் இறைவனின் அடியார்கள் (சேஷபூதன்) எனும் எண்ணம் ஆழப்பதிந்துவிட்டால், நமது உண்மையான சொரூபமான ‘வெள்ளுயிர்’ (சுத்தாத்மா) என்பது தெளிவாகிவிடும். ‘வைகுந்தம் புகுவது மண்ணவர் விதி’ என்று இருக்கும் போது அதற்காக சிரமப்பட்டு பிற உபாயங்களைப் பேணுதல் அவசியமில்லை. குழந்தை அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு இருந்தால் போதுமானது. தாய் போக வேண்டிய இடத்திற்கு அன்பாகவும், பாசமாகவும் இட்டுச் செல்வாள். நாம் ஏதோ சுதந்திரமானவன் போல் எண்ணிக்கொண்டு தனியாக நடக்க முற்படும் போதுதான் பிரச்சனைகள் உருவாகின்றன. அம்மா விரலைக் காட்டுகிறாள். பற்றிகொள்ள வேண்டியது நம் புத்திசாலித்தனம். இறைவன் பாகவதர்கள் (அடியார்) மூலமாக அப்படியொரு செயலைச் செய்கிறான். பாகவதர்களே பற்று என்று கையைப் பிடித்துக் கொண்டால் வைகுந்தம் புகுவது நம் விதி. இதில் மாற்றமேதுமில்லை.

மிக, மிக ஆச்சர்யமாக, இறைவனுக்கு மங்களாசாசனமாக முன்னிருத்தும் பாசுரங்களில் செல்வநம்பிகள் எனும் அடியாரைப் பற்றிப்பேசுவது அதிசயமல்லவா? ஏனப்படிச் செய்கிறார் பட்டர்பிரான்?

ஏனெனில் அல்வழக்குகள் அற்ற ஒருவரை முன்னுதாரணமாகக் காட்டுவதன் மூலம், ‘வாழைக்குலையில் இருக்கும் காய்களில் ஒன்று பழுத்துவிட்டது! எனவே மற்றவையும் பழுத்துவிடும்’ எனும் உறுதிப்பாட்டை, ‘செல்வனைப் போலத் திருமா லே! நானும் உனக்குப் பழவடியேன்’ என்ற வரிகளால் செப்புகிறார். இவர்தானே பரநிர்ணயம் செய்தவர். அப்படியிருக்க செல்வநம்பிகளைச் சிறப்பிப்பானேன்? என்று கேட்டால், “அதுதான் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம்” என்பது! பிற சம்பிரதாயங்களில், “ஸ்வாமி” என்று இறைவனைக் கொண்டாடும் போது. ஸ்ரீவைஷ்ணவம் ஒன்றுதான் அடியாரை ”ஸ்வாமின்னு” என்று விளம்புகிறது! அத்வைத சாரம் என்பது ஸ்ரீவைஷ்ணவத்திலேதான் சிறக்கக் கிடக்கிறது என்று காண்க.

ஆக, பாகவத சம்பந்தம் வந்தவுடன் மட, மடவென சிலத்தெளிவுகள் நமக்குள் வருகின்றன. அதாவது, 1. தேகம் ஆன்மாவன்று, 2. ஆன்மா சுதந்திரமானது அல்ல, 3. தேவதாந்தரங்கள் பரதெய்வமன்று, 4. இறைவனிடத்தில் அல்ப பலன்களை வேண்டிக் கையேந்துதல் கூடாது, 5. மோட்சம் வேண்டுமென்பதற்காக கருமம், ஞானம் போன்ற உபாயங்களைக் கைக்கொள்ளுதல் தேவையில்லை போன்றவை.

இந்த ஞானத்தெளிவு வந்தவுடன் வாயில் வரும் மந்திரம், ‘நமோ! நாராயணா’ என்பது. அதைப் பல்வகையிலும் பரவச் சொல்லி பல்லாண்டு பாடுவதே நம் களிப்பு. அதுவே வாழ்வின் களிப்பு. அதுவே மோக்ஷம்!

தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 10

கட்டளை 10

என்று இறைவனுக்கு அடியேனென்று ஆட்படுகிறாயோ அன்றே உனக்கு வீடு பேறு சித்தித்தது என்று கொள்வாயாக! 
எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே


எந்த நாளன்று எம்பெருமான் உனதடிக்கு அடியோமென்று திருத்தோள்களில் எழுத்தப்பெற்றோமோ அந்த நாளே தங்களது திருக்குடிலான பரமபத வீடு பெற்று உய்வுற்றோம். செம்மையான திருநட்சத்திரத்தில் தோன்றி, வடமதுரையில் சிலைவிழவு கூறி உனைச் சிறைப்பிடிக்க முயன்ற கஞ்சன் சிலை வளைத்து, ஐந்து தலைகள் கொண்ட பாம்பின் கொட்டத்தையும் அடக்கிய ஆண்டவனே! நீ வாழ்க! வாழ்க பல்லாண்டு!

இதுவொரு ஆச்சர்யமான பாசுரம்! என்று திருமாலடிமை என்று திருக்கூட்டத்தில் சேர்கிறோமோ அன்றே, அப்போதே வீடுபேறு நிச்சயம் என்று துணிந்து கூறும் பாசுரம். எப்படி இவ்வளவு சர்வ நிச்சயமாகக் கூறமுடிகிறது? என்று கேட்கலாம். ஒன்று, உலக நாயகனாக வலம் வருபவன் திருவிக்கிரமன். அவனே சர்வ கோடி சேதன, அசேதன கூட்டங்களிலும், பல்வேறு தெய்வக்கூட்டங்களிலும் உள்ளுறை நியாமகனாக இருந்து செயல்படுத்துகிறான். மற்ற தெய்வங்களிடம் அல்ப பலன் கருதி அடிமைப்படுதலைக் காட்டிலும், சர்வ வியாபகனான சர்வேஸ்வரனிடம் சரண் புகுதல் சாலச்சிறந்தது என்று கீதையில் பகர்கிறான். சர்வ வல்லமை பொருந்திய அவனிடம் சரண் புகுந்தக்கணமே நமக்கு வீடுபேறுநிச்சயம். இதில் சந்தேகம் கொள்ள இடமே இல்லை. ஆயின் அதைவிட முக்கியமாக சில விஷயங்களை முன்வைக்கிறார் பட்டர்பிரான் இத்திருப்பல்லாண்டு பாசுரத்தில். 

ஒன்று, வாலைக்குலையில் எப்படி ஒரு காய் பழுத்தால் மற்ற காய்களும் மட, மடவென பழுத்துவிடுகின்றனவோ அது போல் திருமாலுக்கு அடியேன் என்று பல்லாண்டு கூறும் அடியார் கூட்டத்தில் சேர்ந்தவுடன், ஞானமுற்றோர் சேர்க்கையாலே நமக்கும் ஞானம் வர வீடுபேறு உடனே சித்திக்கிறது. இதே தொனியில் விழும் இன்னொரு பாசுரம் திருவாய்மொழியில் உள்ளது. அவர் இன்னும் ஒரு படி மேலே போய், ‘மண்ணவர் வைகுந்தம புகுவது விதியே!’ என்று சொல்கிறார். திருவிக்கிரமானாக உலகளந்த போது திருவடி சம்பந்தம் மண்ணுலகவாசிகளுக்குக் கிடைத்ததால் அவர்கள் காலம் முடிந்தவுடன் வைகுந்தம் போவது உறுதி என்பது பொருள்.

இரண்டு, இதையும் விடச் சுவையான பொருளொன்றைப் பெரியோர் சொல்வர். அது ஆழ்வார் வாக்கில் ‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்று வருகின்ற பதத்தைப்பொருள் கொள்வதால் வருவது. சரி! வீடுபேறு நிச்சயம் என்று கீதாச்சார்யன் சொல்லிவிட்டானே என்றால், அச்சுவை கூட இவர்களுக்குத் தேவை இல்லையாம். அடியார்களோடு இருந்து, சத்சங்கத்தில் திளைத்து இறை அனுபவத்தை இவர்களோடு பங்கிட்டு அனுபவித்தலே வைகுந்தச் சுவையைவிடச் சுவையானது என்பது வைணவர்கள் துணிபு!

இவ்வளவு விஷயம் இருக்கும் போது, ‘அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்!’ என்று சொல்வதில் ஆச்சர்யமே இல்லை. இவர்களது இந்த சர்வ நிச்சயமான துணிவு நாம் பெற்ற பெறும் பேரு என்றுதான் சொல்ல வேண்டும். பராசரபட்டர் மட்டும்கொஞ்சகாலம் கூட இருந்திருந்தால் ‘வைகுந்தப்பதிக்கு சுழற்படி’ கட்டியிருப்பார்! தேவ ரகசியங்கள் அறிந்த இத்தகைய பெரியோர் வகுத்த ஒரு பெரும்நெறி இன்னமும் இந்த மண்ணில் வாழ்வது அதிசயம். இதற்கு அடிகோலியவர்கள் ஆழ்வார்கள். தெய்வம் என்றால் எது? அது எத்தகையது? அதைச் சேர்வது எப்படி? என்று தெள்ளத்தெளிவாக செந்தமிழில் பகர்ந்ததால்தான் நாலாயிரதிவ்யப்பிரபந்தம் இறைவன் முன் செல்ல, ஆக்கியோன் இவ்வருளிச்செயல் கண்டு ஆனந்தித்து பின் செல்ல, அதன் பின் வடவேதம் செல்கிறது. வேதம் இப்படி சர்வ நிச்சயமாகச் சொல்வதில்லை, அருளிச்செயல்களே அதைச் செப்புகின்றன எனக்கண்டு ஆய்ந்து வழி செய்த நம் பெரியோர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 

செந்தமிழில் இப்படியோர் பொக்கிஷம் இருப்பது அறியாமல் நம்மில் பலர் வறுமையுற்று இருப்பது வருந்தத்தக்கது அன்றோ!

தென் தமிழின் பத்துக்களைகள்: 9


கட்டளை 9

நாம் வாழும் பிரபஞ்சம் என்பது இறைவனின் சிந்தனை பட்டுப்பிறந்ததால் நம் வாழ்வே பகவத்பிரசாதம் எனக்கொள்க!

உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

இறைவன் திருமேனியில் உடுத்திக் களைந்த பீதாம்பரத்தை நாங்கள் உடுத்திக்கொண்டும், அவன் உண்டு மீந்த உணவை நாங்கள் உண்டு மகிழ்ந்தும், அவன் சூடிக்களைந்த திருத்துளாய் (துளசி) மாலையை நாங்கள் சூடிக்கொண்டும் இறைவன் ஏவியனுப்பிய திக்கிலே ஆக வேண்டிய காரியங்களை ஒழுங்காகச் செய்து கொண்டும் பாம்பணையில் பள்ளி கொள்ளும் எம் பரந்தாமனுக்கு பல்லாண்டு பாடிக்கொண்டு மகிழ்வாய் வாழ்வோம்.

இந்திய இறையியல் விழுமியங்களின் தோற்றுவாயைத் தொட்டுச் செல்கிறது இப்பாசுரம். ஊழி தோறும் இப்பிரபஞ்சத்தை படைத்து, காத்து கெடுத்துழலும் மூலப்பரம்பொருள் உண்டு என்று நம்புவோருக்குத் தெளிவாகப் புரிய வேண்டிய விஷயம், இப்பிரபஞ்ச் சிருஷ்டி என்பது அவனது சங்கல்ப மாத்திரத்தில் தோன்றுவது என்பது. அப்படியெனில் இப்பிரபஞ்சமே அவனது பிரசாதம். நாம் உண்ணும் சோறு அவனது பிரசாதம், பருகும் நீர் மற்றும் திரவ வஸ்துக்கள் அவனது பிரசாதம் (நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்), நாம் போகித்து அனுபவிக்கும் தாம்பத்ய இன்பம் என்பதும் அவன் பிரசாதம். நமக்கு உயிரளிக்கும் உயிர்வளி, நாம் துயில் கொள்ளும் மண் என்று நம் வாழ்வே பகவத் பிரசாதம். இதை பட்டர்பிரான் கவித்துவமாகச் சொல்கிறார். காதல் மிகுந்த மனைவி கணவனின் சட்டையை அணிந்து பார்ப்பாள். அம்மாவுடன் போகும் குழந்தைகள் முந்தானைக்குள் முகம் புதைத்துக்கொள்ளும். இது இயற்கையானது. அது போலவே எம்பெருமான் உடுத்திக்களைந்த ஆடையை அடியார்கள் உவப்புடன் அணிந்து மகிழ்வர் இன்றும் அம்பாளுக்கு சாத்திய புடவையெனில் பெண்கள் ஆசையுடன் வாங்கி அணிவர். கோயிலில் பெருமாளுக்கு நிவேதிதம் செய்த உணவே பகவத்பிரசாதமாக வழங்கப்படுகிறது. பெருமாளுக்கு சூட்டிய திருத்துளாய் மாலை அர்ச்சனை செய்வோருக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இது அடிப்படையில் சொல்லும் சேதி உலகமே, இவ்வாழ்வே பகவத் பிரசாதம் என்பது. அதனால்தான் குழந்தைகளுக்கு பிரசாத் என்று பெயர் வைக்கிறார்கள். ‘அல்லாப்பிச்சை’ என்ற பெயர் தென் மாவட்டங்களில் மிகுதி. நம் வாழ்வு அவனிட்ட பிச்சை அல்லவா? இந்தக் கருத்து மெல்ல மெல்ல சமூக கட்டமைப்பிற்கு எடுத்தாளப்படுகிறது. அதாவது உலகிற்கு நாயகன் கடவுள். வீட்டிற்கு நாயகன் கணவன். எனவே கணவனே கண்கண்ட தெய்வம். இறைவனுக்கு அளிக்கப்பட்ட உணவின் மீதத்தை உண்பது பிரசாதம். கணவன் உண்டு மீந்த உணவுடன் அதே இலையில் உண்பது பெண்களுக்கு அழகு. கணவன் வாங்கிக்கொடுக்கும் ஒர் முழம் பூவிற்கு மதிப்பு அதிகம் என்று இக்கருத்து சமூகப் படிநிலை கட்டமைப்பிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஒரு பாகவதன் உண்டு மீந்த எச்சல் பகவத் பிரசாதமாகக் கருதப்படுகிறது. இப்பிரசாதம் கிடைக்க வழி செய்யவில்லை என்று பெரியவர்கள் விவாகரத்துவரை சென்றிருக்கின்றனர். இங்குதான் எது உருவகம்? எது நிஜம் எனும் மயக்கம் தோன்றுகிறது. உருவகத்தை உருவகமாக வைத்து சுகாதார அடிப்படையில் எச்சல் சாப்பாட்டை தவிர்க்கலாமே? என்றொரு எண்ணம் தோன்றுகிறது அதே நேரத்தில் காதல் முற்றிய நிலையில் சுகாதாரம் என்பது இரண்டாம் இடத்தையே பிடிக்கிறது என்பது நாம் அறிந்ததே. கணவன் உண்ட தட்டில்/இலையில் சாப்பிடும் வழக்கம் அருகி வருகிறது. கணவனே கண்கண்ட தெய்வம் என்று குஷ்டம் வந்த கணவனைக் கூடையில் தூக்கி வைத்து புறப்படும் பெண்களும் அருகி வருகின்றனர்.

உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன். சரிதான்! ஆனால், நாம் செய்ய வேண்டியது ஒரு சின்னக்காரியம். “என்று கண்ணீர் மல்கி” என்கிறார் நம்மாழ்வார். நினைத்து கண் கலங்கினால் போதுமானது என்பதே ஆழ்வார்கள் திருவுள்ளம் என்றும் கொள்ளலாம்!

இறுதியாக இறைவன் இட்ட கட்டளைக்கு இட்ட திக்கில் சென்று ஊழியம் செய்வோம்! என்று சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று பட்டர்பிரான் சொல்கிறார். இதைப் பலர் மெய்ப்பித்துள்ளனர். நல்ல உதாரணம் சுவாமி விவேகாநந்தர். இவ்வுலகு ஒன்று என்று கண்ட அவர் மேலைநாடுகளுக்குச் சென்று இந்திய ஆன்மீகச் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு ஆண்டவன் கட்டளை கன்னியாகுமரியில் கிட்டுகிறது. இட்ட திக்கிற்குச் செல்கிறார். அடுத்து பரமஹம்ச யோகாநந்தர். இவருக்கும் அமெரிக்கா போகக்கட்டளை வருகிறது. ஸ்வாமி பிரபுபாதா! பரனூப் பெரியவர் கண்ணீர் மல்கச் சொல்வார். ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆனந்தமாக தெய்வ தரிசனம் செய்து கொண்டு வாழலாமெனில், உலா வரும் நம்பெருமாள் இவரைப் பார்த்து,’நீ அங்கு போ! இங்கு போ!’ என்பானாம். அவனிட்ட கட்டளைக்கேற்ப இவர் அலைந்து கொண்டு இருப்பதாகச் சொல்வார். ஆழ்வார்களின் பார்வையில் ஆண்டவன் கட்டளை எது? என்று உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் மிக அழகாகச் சொல்கிறார். விழியம் காண்க!

தென் தமிழின் பத்துக்களைகள்: 8


கட்டளை 8

அன்னையிட்ட சோறு ருசியில் குறையில்லாமல் இருப்பது போல் வாழ்வதற்கு தேவையான அனைத்தும் தந்து அதன் மேலும் நம்மை வெள்ளுயிர் (சுத்த ஆத்மா) ஆக்கி தளிர்ப்பிக்கும் இறைவனை வாழ்க, வாழ்கவென்க! 


நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே
நல்லுயிர் வாழ தாரகம் (அன்னம்), போஷகம் (நெய், பால்), போக்யம் (சந்தனம், புஷ்பம்) இவை தேவை. இதுவே பலர் வேண்டும் வரமாகவும் உள்ளது. இது அருளப்பெற்றால் போதுமென்றே பலர் சொல்லக்கூடும். அத்தகையோர் ஆசைக்கேற்ப அனைத்தும் வழங்கியும் நில்லாது அதற்கும் மேலாக எமது ஆன்ம சொரூபத்தைக் காட்டி தொண்டூழியம் செய்யும் படி ஆட்செய்த கருடக்கொடியோனுக்கு பல்லாண்டு கூறுமினே!

மிகப்பொருள்ள ஒரு கட்டளை. இறைவனை ஏன் வணங்க வேண்டும்? எனும் கேள்விக்கு இங்கே பதிலுள்ளது. நாம் பிறக்கும் போது கையில் ஏதும் கொண்டு வருவதில்லை. எல்லாமும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்பு என்பது ஒரு விருந்து. போகிக்க வேண்டிய அனைத்தும் முன்னமே படைக்கப்பட்டுள்ளது. நாம் வந்து, பிறந்து, வளர்ந்து, போகிக்க வேண்டியதுதான். அதைத்தான் நம்மில் பலர் செய்து கொண்டு, ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலமென’ வாழ்கிறோம். ஆயினும் நம்மில் சிலருக்கு இந்த பிறப்பின் ரகசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது? எதற்காக இந்தப் படைப்பு? நான் யார்? நான் இவ்வுலகிற்கு வருமுன்னர் எங்கிருந்தேன்? ஏன் இவையெல்லாம் எனக்கு முன்னமே வழங்கப்படுள்ளன? இதன் பொருளென்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. ‘இந்த வேட்கையை’ எழுவிப்பவனும் இறைவனே! இந்த வேட்கை வளர, வளர நமது உண்மையான
ஆத்ம சொரூபம் விளங்கப்பெறுகிறது.

உலகம் ருசிக்கிறது! உண்ணும் சோறு ருசிக்கிறது. பருகும் நீர் (பால், தயிர் இத்யாதி) இனிக்கிறது, தின்னும் வெற்றிலை (போகப்பொருள்கள்) ருசிக்கிறது. ஏன் இவை தரவேண்டும்? ஒரு தாய் தன் பிள்ளைக்கு ருசியாகச் சோறு போட எக்காரணமும் தேவையில்லை. அவள் தாயுள்ளம் அதை விரும்புகிறது. நன்றாக குண்டு, குண்டாக பிள்ளை இருந்தாலும், ‘ஐயோ! பாவம்! குழந்தை இளைத்துவிட்டது! என்று இன்னொரு கை சோறு போடுவாள். அது போல தாயிற் சிறந்த தயாபரனான இறைவன் நமக்கு எல்லாம் வழங்கி அழகு பார்க்கிறான். குழந்தைக்கு கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் வைத்துப்பார்ப்பதில்தான் எத்தனை இன்பம்! இல்லையா? ஆடி வரும் தேர் இல்லையா குழந்தைகள்! இறைவனின் குழந்தைகள் நாம். எல்லாம் அனுபவித்து வளர்ந்து வரும் நாம், ஒரு நாள் நன்றிக்கடன் படுகிறோம். திடீரென்று உதிக்கிறது! எதற்காக பெற்றோர் நம்மை ‘இப்படி’ கவனித்துக்கொள்கின்றனர்? குறிப்பாக தாயின் அன்பிற்குக்காரணமென்ன? எனும் கேள்வி.

அப்போதுதான் இறைவனுக்கும் நமக்கும் ஒழிக்க, ஒழிக்க ஒழியாத உறவு புலப்படுகிறது.

பொதுவாக குணங்கள் மூன்று ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பன அவை. விஷ்ணு ஸத்வ குணம். பிரம்மா ரஜோ குணம். சிவன் தமோ குணம். பிரபஞ்ச பரிபாலணத்திற்காக பரம் இத்தகையக குணங்களை தன் மேல் ஏற்றிக்கொண்டு செயல்படுகிறது. இக்குணங்கள் ஆன்மாவிற்குமுண்டு. பகவான் ஸத்வ குணனாக இருக்கிறான். அதுவே உள்ளதில் சிறந்த குணம். அதைப்பெற துடிக்கும் அடியான், ‘பாகவதன்’ என்று அழைக்கப்படுகிறான். இறைவனுடைய ஸத்வ குணம் முழுமையாகப் பெற வேண்டும் என்பதே பாகவதனின் அவா.   ஸத்வகுணத்தை வெண்ணிறம் உள்ளதாகவும், ரஜோ குணத்தைச் சிவப்பு நிறமுள்ளதாகவும், தமோ குணத்தைக் கறுப்பு நிறமுள்ளதாகவும் கூறுவது கவிமரபு. அதற்கிணங்க ஸ்த்வ குணசீலனாக எம்மை மாற்றிவிடும் போது நம்முயிர், ‘வெள்ளுயிர்’ ஆகிவிடுகிறது. அதாவது, சுத்தஸ்வரூபராக ஆக்கினான் நம்மை என்று காண்க!

இப்படி ஆக்கியவன் எப்படிப்பட்டவன்? பை நாகப் பாம்பில் சயனித்து இருப்பவன். அந்த நாகத்திற்கு ஜென்மப்பகைவனான கருடனைக் கொடியாக, வாகனமாகக் கொண்டவன்! அதாவது நட்பு, பகைமை என்பது போன்ற துருவங்கள் அவனை ஒன்றும் செய்யாது. அக்குணங்களுக்கும் அடைக்கலமாக உள்ளவன் அவன். எனவேதான் அவன் ‘நிர்குணன்’.

நமக்கு நல்லதோர் வாழ்வளித்து, மேலும் நமது உண்மையான ஆன்ம சொரூபத்தையும் துலங்கச் செய்யும் வள்ளலுக்கு பல்லாண்டு கூறுவது நமது
கடமை என்று காண்க!


தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 7


கட்டளை 7

கோயிலெனும் அமைப்பின் மூலமாக ஒற்றுண்டு, வாழையடி வாழையாக திருமாலின் திருச்சின்னங்களைத் தோளில் ஏந்தி அடியார்களுக்கும், எம்பெருமானுக்கும் தொண்டு செய்து வாழ்வீராக!


தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமேமிக நேர்த்தியாக எரிகின்ற தீயைவிடப் பொலிவு கொண்ட செஞ்சுடராழியெனும் சக்கரத்தின் பொறி (யந்திரம்)ஆகத் திகழும் கோயிலில் ஒன்றுபட்டு வந்து நின்று ஏழுதலைமுறையாக (குடிகுடியாக) திருமாலுக்கு ஆட்செய்கின்றோம். மாயப்போர் செய்கின்ற பாணாசுரனின் ஆயிரம் தோள்களும் அறுபட்டு, குருதியாறு பாயும் படி செய்த ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறி வாழ்த்துவோமே!

தீ என்பது இந்துக்களுக்கு எல்லாவகையிலும் முக்கியமானது. இந்திய மரபின் தொன்மையைச் சுட்டும் முகமாக தீ அமைந்துள்ளது. மனிதப்பரிமாணாத்தின் மிக முக்கிய மைல்கல் நெருப்பின் பயனை அறிந்து கொள்ளுதல். அதுவரை பச்சைக்காய்கறிகளையும், மாமிசத்தையும் உண்டு வந்த மனிதன் நெருப்பின் பயனறிந்து சமைக்கத்தொடங்குகிறான். வேளாண்மை எனும் அடுத்த மைல்கல்லைத் தொட்டவுடன் அதுவரை உண்டு செறிக்க முடியாத அரிசி, பருப்புவகைகளை சமைத்து உண்ணக்கற்றுக்கொள்கிறான். எப்படி நெருப்பு என்பது மண்ணில் விளையும் பயிர்களையும், உயிர்களையும் உயிர்சக்தியாக மாற்றி அருளுகிறதோ, அதே அக்னி பூமியிலிருந்து தேவர்களுக்குப் படைக்கப்படும் படையல்களையும் ஏந்திச் செல்வதைக் காண்கிறான். அக்னி அவன் வாழ்வின் முக்கிய ஊடகமாக அமைகிறது. அக்னியை அணையாமல் வைத்திருந்து வழிபடும் வழக்கம் (அக்னிஹோத்ரி) தோன்றுகிறது. அக்னி சாட்சியாக திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் வருகிறது. அக்னியின் தீச்சுவாலையில் தூசுகள் சுடுபட்டு அழிவது போல் செஞ்சுடராழி கொண்ட திருமாலின் நினைவாலே பாபங்கள் அழியும் என்கிறாள் பட்டர்பிரான் கோதை (தீயினுள் தூசாகும் செப்பு!).

இத்தகைய பெருமையுடையது தீ. ஆயினும் இத்தீச்சுவாலையே வெட்கப்படும் படியான ஒளி பொருந்தியது திருமாலின் சுதர்சனம் எனும் சுடராழி. அதுஎத்தன்மையது எனக்கேட்போருக்கு அதன் பராக்கிரமத்தைச் சுட்டும் முகமாக பாணாசுரவதம் எனும் கதையை நினைவுபடுத்துகிறார் பட்டர்.
பாணாசுரன் ஒரு சிவ பக்தன். ஒருமுறை சிவனின் ஆனந்த நடனத்தைக்காணும் பாக்யம் கிடைக்கிறது அவனுக்கு. சிவ நடனத்திற்கு மத்தளம் வாசித்துக்கொண்டிருந்த அவனுக்கு, ‘எமக்கு ஆயிரம் கைகளிருந்தால் இன்னும் எவ்வளவு திறமையாக வாசிக்கலாம்!’ எனும் எண்ணம் வர, சிவனிடம் ஆசையோடு ஒரு வரம் கேட்கிறான். பக்தர்களின் எல்லா ஆசைகளையும் உடனடியாக நிறைவேற்றி வைக்கும் சிவபெருமான் பாணாசுரன் வேண்டிய படி ஆயிரம் கைகளை வழங்குகிறார். ஆயிரம் கைகள் பெற்ற பாணாசுரன் நாளடைவில் அவை மத்தளம் வாசிக்கக் கொடுக்கப்பட்டவை என்பதை மறந்து, தன் புதிய தோள் வலியால் தேவர்களையும், மானுடர்களையும் வதைக்கத்தொடங்குகிறான். வழக்கம் போல் எல்லோரும் திருமாலிடம் வந்து முறையிட அவர் கிருஷ்ணாவதாரத்தில் தமது சுடராழி கொண்டு அவனது ஆயிரம் கைகளையும் அரிந்து அவனை மானகர்வபங்கப்படுத்துகிறார். ஆயிரம் கைகளைக் கொய்யும் போது குருதி பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. இக்காட்சி பட்டர்பிரானுக்குத் தோன்ற ஆழிவல்லானான திருமாலுக்கு மங்களாசாசனம் செய்கிறார்.

இத்தகைய பெருமையுடைய ஆழி, சுதர்சனம் என தனியாக வழிபடப்பெறுகிறது. சுதர்சன யாகங்கள், சுதர்சன மந்திரம், சுதர்சன யந்திரம் எனத் தொன்று தொட்டு வழிபடப்பட்டு வருகிறது. சில கோயில்களில் பெருமாளைவிட சுதர்சனர் சந்நிதி பிரபலமாக வழிபடப்படுவதுண்டு. அத்தகையதோர் கோயிலை நினைவில் கொண்டு, “சக்கரத்தின் கோயிற் பொறி”யாக விளங்கு கோயில் என்கிறார். உதாரணமாக திருமோகூர் கோயிலாக இருக்கலாம். பட்டர்பிரான் பல்லாண்டு பாடிய கூடல் நகருக்கு அருகிலிருக்கும் கோயிலாகுமிது! திருமால் கோயிலே மிகச்சக்தி வாய்ந்த ஒரு யந்திரம் எனும் பொருளும் தொக்கி நிற்கிறது இங்கு. கோயிலுக்கு வருகை புரிதலே பல நன்மைகளைச் செய்யும் என்று சொல்லி கோயிலில் குடி குடியாக வந்து ஆட்செய்கின்றோம் என்கிறார். ‘நாடுநகரமும் நன்கறிய’’எல்லோரும் வந்து நாராயணா எனும் திருமந்திரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறைகூவலிட்டதற்கிணங்க அடியார்கள் கூட்டம் திருமால் கோயிலில் வந்து நெருக்கக் காண்கிறார் பட்டர். எல்லோருக்கும் சங்கு, சக்கர முத்திரைகளை தோளில் பதித்து விஷ்ணு பக்தர்களாகின்றனர். ”சக்கரத்தின் பொறி” என்பதை சக்கர அடையாளம் என்று கொண்டால், பாணாசுரன் தோள்களை நினைவுபடுத்தும் விதத்தைப் பார்த்தால் இப்படியும் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது!ஆழ்வார்கள் பொதுவாக பிரபந்ந ஜன கூடஸ்தர்கள். ஆகமாசாஸ்திர முறையை தென் தமிழகத்தில் பரப்பியவர்கள். அக்னிகோத்ரிகளாக தனியாக
இறைவழிபாடு செய்து வாழ்ந்து வந்த உயர்குலத்தின் உயர் விழுமியங்களை எல்லோருக்கும் விநியோகிக்கும் இடமாக கோயிலை உருவகித்து கோயில் வழிபாட்டை முக்கியப்படுத்துகின்றனர். அவ்வகையில், பெரியாழ்வார் இப்பாடலில் கோயில் என்பது ”குமுகாயப்பொறி” (social engine) என்று சொல்வது மிகமுக்கிய சமூகவியல் பொருள் கொண்டது. வேளாண்சமூகத்தின் சக்தியை ஒன்று திரட்ட பின்னால் வந்த தென்னக அரசுகள் கோயிலையே பிரதான கேந்த்ரமாகப் பயன்படுத்துகின்றன. அதனாலேயே கோயில் என்பது கோட்டை போல் இருப்பதைக் காணலாம். மக்கள் ஒன்று கூடுகின்ற இடமே அரசியல் பிரசாரத்திற்கும், சக்தியைத்திரட்டுவதற்கும் ஆதாரமாகிறது. பின்னால் வந்த சைவ, வைஷ்ணவசண்டைகளுக்கும் இந்த அரசியல் பங்கீடு அளிக்கும் கோயில் அதிகாரம் முக்கியமாகப்போய்விடுகிறது. வேளாளர்களின் கைவசமிருந்த சைவக்கோயில்கள், புறநகர்ப்புறம் அமைந்து விளிம்புநிலை மக்களின் அதிகாரத்தைக் கைக்குள் வைத்திருந்த வைஷ்ணவக்கோயில்கள், இவை இரண்டிற்குமான சமூக அரசியல் அதிகார பங்கீட்டுச் சண்டையே தத்துவார்த்தமான சைவ-வைஷ்ணவச் சண்டை போல் உருவகப்படுத்தப்படுகிறது என்றும் காணலாம். எனவே பெரியாழ்வாரின், “கோயில் பொறி” எனும் பதம் இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கது!

எப்படியாயினும் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதே இக்கட்டளை என்றும் கொள்ளலாம்!

தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 6


கட்டளை 6

வாழையடி வாழையாக எந்தை, தந்தைதம் மூத்தப்பன் என்று இம்மண்ணின் வளத்துடன் உருவாக்கித்தந்திருக்கும் இறைப்பொருளை இறைஞ்சுதலே எம் தலையாய கடமை!


எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமேமரபு என்பது மண் சார்ந்தது. எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்நாடு! அதனாலேயே அது வந்தனைக்குரியது. காலம், காலமாக, தலைமுறை, தலைமுறையாக சித்தாங்களை வளர்த்தெடுத்து, சீர் செய்து, நெறிப்படுத்தி நம் கையில் கொடுத்துள்ளனர். அதை வந்தனை செய்து, மகிழ்ந்து, ஏற்று, வணங்கி உய்வுறுதல் எளிது. அதனை விடுத்து புதிய சித்தாங்களை ஏற்று, அவதியுற்று, அல்லல்பட வேண்டாமென முன்னைய கட்டளையில் சூசகமாச் சொன்னார்.

அது மட்டுமில்லை, இறைவனே காலத்திற்கு ஏற்ற வடிவில் தக்க தன்மையுடன் வந்து அருளுகிறான் என்பதைக் குறிக்க நரசிம்ம அவதாரத்தை முன்மொழிகிறார். ’குழந்தை’ பிரகலாதன் இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று கூற. “இங்கு இருப்பானா?” எனக் கேள்வி கேட்காமல், “இங்கு இல்லையெனில்” உன்னைக் கொல்வேன் என்று கூறும் அளவிற்கு எதிர்மறை உள்ளம் கொண்ட இரணியன் போன்ற கொடிய அரக்கரைக் கொல்ல மிகக்குரூரமான நரசிம்ம அவதாரம் எடுத்து வந்தவன் இறைவன். பக்தனின் பலம், எதிரியின் பலம், காலத்தின் தேவை இவையெல்லாம் கணக்கில் கொண்டு அவதாரம் நடக்கிறது. தேவ தேவர்களெல்லாம் நரசிம்மரின் உக்கிரத்தைக் கண்டு நடு, நடுங்கி பதைக்கும் போது ‘குழந்தை’ பிரகலாதன், இக்கொடூர ரூபத்திலும் உறைபவன் நாரணனே எனக் கண்டான் எனச் சொல்லும் விதமாக ‘திருவோண நட்சத்திரத்தை’ நினைவுறுத்துகிறார் பட்டர்பிரான். இத்தகைய பல்வேறு அவதாரங்கள் தோன்றிய பூமி, இங்கு வழி, வழியாக நாம் ஹரியின் புகழ் பாடி உய்வுற்று வளர்ந்து வந்தோம். எனவே அந்த அழகிய மரபிற்கு ஓர் பல்லாண்டு என்று மங்களாசாசனம் செய்கிறார் பட்டர்பிரான். இப்படி மரபைப் பேண வேண்டும் என்று கட்டளை போடுவதால்தான் அவர் பெரியாழ்வார்! 

நம் பெருமிதங்கள் அறிந்து சிறப்புற வாழ வாழ்த்துக்கிறார் எம் ஆழ்வார்கோன்!