e-mozi

தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 10

கட்டளை 10

என்று இறைவனுக்கு அடியேனென்று ஆட்படுகிறாயோ அன்றே உனக்கு வீடு பேறு சித்தித்தது என்று கொள்வாயாக! 
எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே


எந்த நாளன்று எம்பெருமான் உனதடிக்கு அடியோமென்று திருத்தோள்களில் எழுத்தப்பெற்றோமோ அந்த நாளே தங்களது திருக்குடிலான பரமபத வீடு பெற்று உய்வுற்றோம். செம்மையான திருநட்சத்திரத்தில் தோன்றி, வடமதுரையில் சிலைவிழவு கூறி உனைச் சிறைப்பிடிக்க முயன்ற கஞ்சன் சிலை வளைத்து, ஐந்து தலைகள் கொண்ட பாம்பின் கொட்டத்தையும் அடக்கிய ஆண்டவனே! நீ வாழ்க! வாழ்க பல்லாண்டு!

இதுவொரு ஆச்சர்யமான பாசுரம்! என்று திருமாலடிமை என்று திருக்கூட்டத்தில் சேர்கிறோமோ அன்றே, அப்போதே வீடுபேறு நிச்சயம் என்று துணிந்து கூறும் பாசுரம். எப்படி இவ்வளவு சர்வ நிச்சயமாகக் கூறமுடிகிறது? என்று கேட்கலாம். ஒன்று, உலக நாயகனாக வலம் வருபவன் திருவிக்கிரமன். அவனே சர்வ கோடி சேதன, அசேதன கூட்டங்களிலும், பல்வேறு தெய்வக்கூட்டங்களிலும் உள்ளுறை நியாமகனாக இருந்து செயல்படுத்துகிறான். மற்ற தெய்வங்களிடம் அல்ப பலன் கருதி அடிமைப்படுதலைக் காட்டிலும், சர்வ வியாபகனான சர்வேஸ்வரனிடம் சரண் புகுதல் சாலச்சிறந்தது என்று கீதையில் பகர்கிறான். சர்வ வல்லமை பொருந்திய அவனிடம் சரண் புகுந்தக்கணமே நமக்கு வீடுபேறுநிச்சயம். இதில் சந்தேகம் கொள்ள இடமே இல்லை. ஆயின் அதைவிட முக்கியமாக சில விஷயங்களை முன்வைக்கிறார் பட்டர்பிரான் இத்திருப்பல்லாண்டு பாசுரத்தில். 

ஒன்று, வாலைக்குலையில் எப்படி ஒரு காய் பழுத்தால் மற்ற காய்களும் மட, மடவென பழுத்துவிடுகின்றனவோ அது போல் திருமாலுக்கு அடியேன் என்று பல்லாண்டு கூறும் அடியார் கூட்டத்தில் சேர்ந்தவுடன், ஞானமுற்றோர் சேர்க்கையாலே நமக்கும் ஞானம் வர வீடுபேறு உடனே சித்திக்கிறது. இதே தொனியில் விழும் இன்னொரு பாசுரம் திருவாய்மொழியில் உள்ளது. அவர் இன்னும் ஒரு படி மேலே போய், ‘மண்ணவர் வைகுந்தம புகுவது விதியே!’ என்று சொல்கிறார். திருவிக்கிரமானாக உலகளந்த போது திருவடி சம்பந்தம் மண்ணுலகவாசிகளுக்குக் கிடைத்ததால் அவர்கள் காலம் முடிந்தவுடன் வைகுந்தம் போவது உறுதி என்பது பொருள்.

இரண்டு, இதையும் விடச் சுவையான பொருளொன்றைப் பெரியோர் சொல்வர். அது ஆழ்வார் வாக்கில் ‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்று வருகின்ற பதத்தைப்பொருள் கொள்வதால் வருவது. சரி! வீடுபேறு நிச்சயம் என்று கீதாச்சார்யன் சொல்லிவிட்டானே என்றால், அச்சுவை கூட இவர்களுக்குத் தேவை இல்லையாம். அடியார்களோடு இருந்து, சத்சங்கத்தில் திளைத்து இறை அனுபவத்தை இவர்களோடு பங்கிட்டு அனுபவித்தலே வைகுந்தச் சுவையைவிடச் சுவையானது என்பது வைணவர்கள் துணிபு!

இவ்வளவு விஷயம் இருக்கும் போது, ‘அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்!’ என்று சொல்வதில் ஆச்சர்யமே இல்லை. இவர்களது இந்த சர்வ நிச்சயமான துணிவு நாம் பெற்ற பெறும் பேரு என்றுதான் சொல்ல வேண்டும். பராசரபட்டர் மட்டும்கொஞ்சகாலம் கூட இருந்திருந்தால் ‘வைகுந்தப்பதிக்கு சுழற்படி’ கட்டியிருப்பார்! தேவ ரகசியங்கள் அறிந்த இத்தகைய பெரியோர் வகுத்த ஒரு பெரும்நெறி இன்னமும் இந்த மண்ணில் வாழ்வது அதிசயம். இதற்கு அடிகோலியவர்கள் ஆழ்வார்கள். தெய்வம் என்றால் எது? அது எத்தகையது? அதைச் சேர்வது எப்படி? என்று தெள்ளத்தெளிவாக செந்தமிழில் பகர்ந்ததால்தான் நாலாயிரதிவ்யப்பிரபந்தம் இறைவன் முன் செல்ல, ஆக்கியோன் இவ்வருளிச்செயல் கண்டு ஆனந்தித்து பின் செல்ல, அதன் பின் வடவேதம் செல்கிறது. வேதம் இப்படி சர்வ நிச்சயமாகச் சொல்வதில்லை, அருளிச்செயல்களே அதைச் செப்புகின்றன எனக்கண்டு ஆய்ந்து வழி செய்த நம் பெரியோர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 

செந்தமிழில் இப்படியோர் பொக்கிஷம் இருப்பது அறியாமல் நம்மில் பலர் வறுமையுற்று இருப்பது வருந்தத்தக்கது அன்றோ!

0 பின்னூட்டங்கள்: